திருப்பூர்;திருப்பூரில் நடைபெறவுள்ள புத்தக கண்காட்சியில் பணியாற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது ஆசிரியர்கள் தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரில் புத்தக கண்காட்சி வரும் 27ம் தேதி துவங்கவுள்ளது. மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பின்னல் புக் டிரஸ்ட் நிறுவனம் இதை நடத்துகிறது. இந்த கண்காட்சி முன்னதாக நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி வளாகத்தில் நடத்த ஏற்பாடு நடந்தது.
வர்த்தக ரீதியான கண்காட்சி என்பதாலும், பள்ளி வளாகத்தில் கண்காட்சி நடக்கும் நிலையில், மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்றும் பல்வேறு அமைப்பினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், கண்காட்சி நடைபெறும் இடம், காங்கயம் ரோடு, வேலன் ஓட்டல் வளாகத்துக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், கண்காட்சியில், பணியாற்றும் விதமாக திருப்பூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், உதவியாளர்கள் என ஏறத்தாழ 100 பேருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. இது ஆசிரியர்கள் தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய ஆசிரியர் சங்க கோட்ட செயலாளர் தண்டபாணி கூறியதாவது: தனியார் அமைப்புடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் நடத்தும் புத்தக திருவிழாவில் அரசு பள்ளி ஆசிரியர்கள் 100 பேர் ஈடுபடுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது பள்ளிகளில் கற்றலில் பின்தங்கியுள்ள மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்தும் விதமாக ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இதனால் பள்ளிகளில் கற்பித்தல் பணி பெரிதும் பாதிக்கும். மேலும் தனியார் நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் கண்காட்சியில் அரசு பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்துவது சரியான நடைமுறை இல்லை. இதை மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.