திருப்பூர்;ஒருங்கிணைந்த பின்னலாடை ஏற்றுமதி மேம்பாட்டு மையம் அமைக்க, ஐ.கே.எப்., வளாகத்தில், 30 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
திருப்பூரில், ஒருங்கிணைந்த பின்னலாடை ஏற்றுமதி மேம்பாட்டு மையம் அமைக்கும் திட்டம், தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதற்காக, 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுமென, முதல்வர் அறிவித்திருந்தார். அதற்கான பூர்வாங்க பணிகள் துவங்கி நடந்து கொண்டிருக்கிறது.
பனியன் தொழிலை பொறுத்தவரை, சங்கிலித்தொடர் போன்ற அமைப்பில் இயங்குகிறது; பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடைகள், ஒரே வளாகத்திற்குள் உற்பத்தியாவதில்லை. நுாலிழையை துணியாக மாற்றும் 'நிட்டிங்', சாயமிடும் சாய ஆலைகள், சாயமிட்ட துணிகளில் ஏற்படும் சுருக்கத்தை சரிசெய்யும் 'காம்பாக்டிங்'.
குளிர்கால ஆடை தயாரிக்க ஏதுவாக, பனியன் துணியை கம்பளி போல் மாற்றும் 'ரைசிங்', கட்டிங், பல வண்ணங்களில் பிரின்ட் செய்யும் பிரின்டிங் நிறுவனங்கள், கம்ப்யூட்டர் எம்பிராய்டரிங் பணி முடிந்த பிறகே ஆடை வடிவமைப்பு அதற்கு பிறகு, செக்கிங், அயர்னிங், பேக்கிங் என, பல பிரிவுகளாக இயங்குகிறது.
ரூ.10 கோடி நிதியில்...
பனியன் தொழிலாளர்களுக்கு, பனியன் உற்பத்தி குறித்து முழுமையாக பயிற்சி அளிப்பதற்காகவே, பொதுசேவை மையம் உருவாக்கப்படுமென அரசு அறிவித்தது. தமிழக அரசு ஒதுக்கும், 10 கோடி ரூபாய் நிதியில், ஒருங்கிணைந்த பின்னலாடை ஏற்றுமதி மேம்பாட்டு மையம் அமைக்கப்பட உள்ளது.
பனியன் தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் இத்திட்டத்துக்கு, திருமுருகன்பூண்டியில் உள்ள, ஐ.கே.எப்., வளாகத்தில், 30 சென்ட் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அங்கு, அனைத்து பனியன் தொழில் பிரிவுகளுடன், ஒருங்கிணைந்த பயிற்சி மற்றும் பொதுசேவை மையம் அமைக்கப்பட உள்ளது.
குமரன் பொதுசேவை மையம்
இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறியதாவது:
திருப்பூர் வரும் பனியன் வர்த்தகர்கள், அரசு பிரதிநிதிகள் பார்வையிட வசதியாகவும், தொழிலாளருக்கு பயிற்சி அளிக்க ஏதுவாகவும், ஒருங்கிணைந்த பின்னலாடை ஏற்றுமதி மேம்பாட்டு சேவை மையம் அமைக்கப்பட உள்ளது. அதற்காக, 30 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில், மையம் இயக்கப்படும்.
சாயமிடும் வசதியுடன், பனியன் உற்பத்தி பிரிவுகளை அமைக்க, தேவையான அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளோம். கட்டட அனுமதி உட்பட, அனுமதி கிடைத்ததும், கட்டுமான பணிகள் துவங்கும். திருப்பூர் குமரன் பனியன் பொதுசேவை மையம் என்ற பெயரில் அமைக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.