அவிநாசி:ஊராட்சிகளில் உட்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட வளர்ச்சி திட்டங்களை, மக்களின் பங்களிப்புடன் நிறைவேற்ற வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில், வரும், 26ல் நடத்தப்பட உள்ள கிராம சபா கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகங்கள் சார்பில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள், விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் குறித்து ஊராட்சிகளின் இயக்குனர் வழிகாட்டுதல் வழங்கியுள்ளார்.
இதில், 15வது மானிய நிதிக்குழு மூலம், கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்படும் மானிய நிதியை, கிராம ஊராட்சிகளின் வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்தவேண்டும். கிராம ஊராட்சிகளில் ஏற்கனவே உள்ள கட்டுமான, பிற வசதிகளை கருத்தில் கொண்டு, 2023 -- 24ம் ஆண்டுக்கான, 'கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம்' தயாரிக்க வேண்டும்.
ஏற்கனவே, கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் ஆண்டுதோறும் தயாரிக்கப்பட்டு வந்தாலும், திட்டமிடலை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், பொதுமக்கள் பங்களிப்புடன் மக்கள் இயக்கமாக மாற்றி, திட்டமிட வேண்டும் என, மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன.
தயாரிக்கப்படும் கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம், பல்வேறு வசதி சார்ந்த விஷயங்களை உள்ளடக்கிய, ஒருங்கிணைந்த முழுமையான செயல் திட்டமாக இருக்க வேண்டும். வறுமை குறைப்புக்கான செயல் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், வேளாண்மை வளர்ச்சி திட்டம் உட்பட திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.