சென்னை, தேர்வு கால மன அழுத்தத்தை கையாள்வது குறித்து, சி.பி.எஸ்.இ., மாணவர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்களுக்கு சென்னையில் இணையவழி கருத்தரங்கு நேற்று நடந்தது. சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கின் கலந்துரையாடல் அமர்வின் சிறப்பு விருந்தினராக, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பக இயக்குனர் பூர்ண சந்திரிகா பங்கேற்றார்.
இந்த கருத்தரங்கில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நுாற்றுக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இதில், கீழ்ப்பாக்கம் அரசு மன நல காப்பக இயக்குனர் பூர்ண சந்திரிகா பேசியதாவது:
தேர்வுகால மன அழுத்தத்தை கையாள்வதற்கு நேர நிர்வாகம், எதார்த்தமான இலக்குகளை நிர்ணயித்தல், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரித்தல் அவசியம். மேலும், குடும்பம் மற்றும் நண்பர்களிடம் உதவி கோருதல் போன்ற உத்திகளையும் கையாள வேண்டும். மன அழுத்தத்தில் இருந்து விடுபட சுய கவனிப்பும், சுய பொறுமையும் முக்கியமானது.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரதமர் மோடியின் தேர்வு குறித்த விவாதம் என்ற நிகழ்வின் பின்னணியில், இந்த இணையவழி கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பிரதமரின் தேர்வு குறித்த விவாதத்தின் ஆறாவது நிகழ்வு வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது.