அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை வழியாக செல்லும் ஸ்ரீவில்லிபுத்தூர் - -பார்த்திபனூர் சாலை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டு பணிகள் நடந்து முடியும் தருவாயில், ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இருப்பதால் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தின் மேற்கு பகுதியில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் செல்ல ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி, பார்த்திபனூர் வழியாக செல்ல வேண்டும்.இந்த ரோடு குறுகியதாக இருப்பதால் போக்குவரத்திற்கு சிரமம் ஏற்பட்டது.
எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விட முடியாத அளவில் ரோடு இருந்தது. ராஜபாளையத்திலிருந்து ராமேஸ்வரம் செல்வதற்கு பயணம் 6 மணி நேரம் ஆகிறது. பயணமும் சிரமமாக இருக்கிறது. கனரக வாகனங்கள் வந்து செல்ல சிரமப்பட்டன.
இந்தச் சாலையை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றினால், மதுரை--தென்காசி, மதுரை -- தூத்துக்குடி, மதுரை--கன்னியாகுமரி, மதுரை--ராமேஸ்வரம் ஆசிய நான்குவழி ரோடுகளை இணைக்கும் ரோடாக இது அமையும்.
பல்வேறு கோரிக்கைகளுக்குப் பின், அரசு இந்தச் சாலை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தி, விருதுநகர் மாவட்டத்தில் இந்த ரோடும், மேலும் ஒருசில ரோடுகளை சேர்த்து, 650 கோடி நிதி ஒதுக்கி ' பேக்கேஜ் டெண்டர் முறையில் விடப்பட்டு, 2019ல், பணிகள் துவங்கப்பட்டு, முடிவடையும் தருவாயில் உள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் - -பார்த்திபனூர் 108 கி.மீ., தூரம் வரை, இந்த ரோடு 10 1/2 மீட்டர் அகலப்படுத்தி அமைக்கப்பட்டு வருகிறது.
ஆனால் விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக பார்த்திபனூர் செல்லும் பகுதியில் ரோடு இதுவரை அகலப்படுத்தப்படவில்லை. விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டைக்கு உள்ளே நுழையும் பகுதியிலிருந்து காந்தி நகர் வரை உள்ள பகுதிகளில் ரோடு ஓரஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை.
காந்திநகர் பகுதியில் அதிகபட்ச ஆக்கிரமிப்புக்கள் உள்ளது. இவற்றை அகற்றாமலேயே ரோடுகளை அமைத்து விட்டனர். ரோடு பணிகள் முடிவடைந்த நிலையில் ஆக்கிரமிப்புகள் உள்ள பகுதிகளும் மட்டும் ரோடுகள் அகலப்படுத்தப்படாமல் உள்ளது.
ஆங்காங்கு ஒரு சில பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகள் உள்ளது. நெடுஞ்சாலைத் துறை ஆக்கிரமிப்புகளை அகற்றி ஸ்ரீவில்லிபுத்தூர் --பார்த்திபனூர் தேசிய நெடுஞ்சாலையை முழுமைப்படுத்த வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அருப்புக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் பெரியதிருமாள் கூறியதாவது, அரசு விருதுநகர் அல்லம்பட்டி முக்கு ரோட்டில் இருந்து அருப்புக்கோட்டை மில் வரையிலான ரோட்டை நான்கு வழி ரோடாக மாற்ற ஒப்புதல் வழங்கி உள்ளது. விரைவில் பணி துவங்க உள்ளது. அந்த நேரத்தில் நகரில் உள்ள ரோடு ஓர ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படும். என்றார்.