அருப்புக்கோட்டை : ''வார்டில் தெரு விளக்கு அமைக்க கூட அமைச்சரின் சிபாரிசு வேண்டியுள்ள நிலையில் ஆளுங்கட்சி உள்ளது ,''என ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் கவுன்சிலர் குமுறினார்.
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய கூட்டம் தலைவர் சசிகலா தலைமையில் நடந்தது. பி.டி.ஓ., சூரியகுமாரி, கவுன்சிலர்கள், பிற துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நடந்த விவாதங்கள்
சீனிவாசன், (ம.தி.மு.க.,): எனது வார்டில் தெரு விளக்கு அமைக்க மின்வாரியத்தில் பணம் கட்டுவதற்கு அங்குள்ள அலுவலர்கள் அலைய வைக்கின்றனர். பணம் கட்டவே ஒரு ஆண்டு ஆகிவிட்டது. அதன் பின்னரும் தெரு விளக்கு அமைக்காததால் அமைச்சரிடம் சொல்லி சிபாரிசு செய்ய வேண்டிய நிலையில் தான் இந்த ஆட்சி உள்ளது.
வாழவந்தராஜ், (தி.மு.க.,): சுக்கில நத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ் இன்ஜினியரிங் கல்லூரி ,மழலையர் பள்ளி உள்ளது. இங்கு கடந்த 5 ஆண்டுகளாக கட்டட அனுமதி, உரிமம் எதுவும் பெறாமல் அதற்கான தொகையை ஊராட்சிக்கு செலுத்தாமல் கட்டடம் கட்டி வருகின்றனர்.
இதேபோன்று, மலைபட்டியில் இயங்கும் கிரஷர் அனுமதி இல்லாமல் நடத்தப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக இதன் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி வலியுறுத்தி வருகிறேன். அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.
சசிகலா, தலைவர் : நோட்டீஸ் விடப்படும்.
கோவிந்தசாமிநாதன், (தி.மு.க.,) : கூட்டத்தில் எதை கேட்டாலும் பணம் இல்லை என்கிறீர்கள். ஆனால் வாகனத்திற்கான டீசல் கணக்கு மட்டும் 15 ஆயிரம், 14 ஆயிரம் என கணக்கு காட்டுகிறீர்கள். இத்தனைக்கும் சேர்மன் அந்த வாகனத்தையே பயன்படுத்துவதில்லை.
சூரியகுமாரி, பி.டி.ஓ., : நான் பயன் படுத்துகிறேன்.
கோவிந்தசாமிநாதன்: சேர்மன் வாகனத்தை நீங்கள் எதற்கு பயன்படுத்துகிறீர்கள்.
இவ்வாறு விவாதங்கள் நடந்தது.