சாத்துார் : குடிநீர், பாதாள சாக்கடை பணிக்காக தோண்டி மூடாத பள்ளங்கள், தேங்கும் கழிவுநீர், சேதமான சுகாதார வளாகம், இருட்டில் தெருக்கள் உட்பட பல்வேறு பிரச்சனைகளால் சாத்தூர் நகராட்சி 12 வது வார்டு மக்கள் திணறி வருகின்றனர். இவ்வார்டுக்குட்பட்டது ஆண்டாள்புரம், மேலக்காந்தி நகர், ஆண்டாள்புரம் வடக்கு, தெற்குதெரு, குறுக்கு தெரு, ரேஷன் கடை தெரு , நான்கு வழிச்சாலை மேற்கு பகுதி சர்வீஸ் ரோடு ஆகியவை 12 வார்டில் உள்ளது.
ஆண்டாள்புரத்தில் பாதாள சாக்கடை திட்டம் ,புதிய குடிநீர் குழாய் பதிக்கும் திட்டம் என அடிக்கடி பள்ளம் தோண்டப்பட்டதால் ரோடு முழுவதும் சேதமடைந்த நிலையில் உள்ளது.
முதல் தெருவில் சாக்கடை அடைத்து ரோட்டில் கழிவு நீர் தேங்குகிறது. ரேஷன் கடை தெருவில் பேவர் பிளாக் கற்கள் பெயர்க்கப்பட்டு மீண்டும் சரியாக பொருத்தப்படவில்லை இதனால் இருசக்கர வாகனத்தில் செல்வார்கள் தடுமாறி கீழே விழும் நிலை உள்ளது.
மேல காந்தி நகரில் மெயின் ரோடு போடும் பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளதால் இப்பகுதியில் வாகனத்தில் செல்பவர்கள் அவதிப்படுகின்றனர்.
மேலகாந்தி நகரில் 2 சுகாதார வளாகங்கள் சேதமடைந்த நிலையில் செயல்பட்டு வருகின்றன. ஒரு சுகாதார வளாகம் முற்றிலுமாக செயல்படாமல் உள்ளது.
நான்கு வழிச்சாலை மேற்கு பக்கம் சர்வீஸ் ரோட்டில் போதுமான தெரு விளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரத்தில் இப்பகுதியில் நடந்து செல்பவர்கள் வாகனங்கள் மோதி படுகாயம் அடைகின்றனர். கூடுதல் தெருவிளக்கு அமைக்கவேண்டும்.
மூடப்படாத பள்ளம்
கஸ்தூரி, குடும்பத் தலைவி: மேல காந்தி நகரிலும் ஆண்டாள் உரத்திலும் சாக்கடைத்தள்ள ஆட்கள் வரவில்லை. ஆண்டாள்புரம் முதல் தெருவில் குடிநீர் குழாய்க்காக பள்ளம் தோண்டினர் இதற்காக பேவர் பிளாக் ரோடு சேதமடைந்தது. மீண்டும் சரி செய்யப்படவில்லை. 10 நாட்களுக்கு ஒரு முறை தான் சாக்கடையை தள்ள ஆட்கள் வருகிறார்கள்.
ரேஷனுக்காக அலைச்சல்
வசந்தி, குடும்பத் தலைவி: ஆண்டாள்புரத்தில் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர் ரேஷன் கடை வாடகை கட்டிடத்தில் செயல்படுகிறது. தற்போது வேறு இடத்திற்கு மாற்றி விட்டனர். பொருட்கள் வாங்க அலையும் நிலை உள்ளது. அரசுக்கு சொந்தமான நிலத்தில் நிரந்தர ரேஷன் கடை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேதமான சுகாதார வளாகம்
ராஜராஜேஸ்வரி குடும்பத் தலைவி: பெண்கள் பயன்படுத்தும் பொது சுகாதார வளாகம் சுற்றுச்சுவர் சேதமடைந்த நிலையில் உள்ளது இதை சீரமைத்து தர வேண்டும். கொசு உற்பத்தி அதிகமாக உள்ளது. கொசு மருந்து தெளிக்கவும் நடவடிக்கை வேண்டும். வைப்பாறு பாலம் அடியில் மின்விளக்கு அமைத்துத் தந்தால் இரவு நேரத்தில் பொதுமக்கள் அச்சமின்றி நடமாட வசதியாக இருக்கும்.
நடவடிக்கை எடுக்கப்படும்
பூமாரிமுத்து, கவுன்சிலர், (தி.மு.க.,): பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் முடிவடைந்த உடன் அனைத்து ரோடுகளும் புதியதாக போட்டு தர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேல காந்தி நகர் மெயின் ரோடு போட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கூடுதல் தெருவிளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்றார்.