ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க.,வுக்கு, இரட்டை இலை சின்னம் உண்டா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதை தீர்மானிக்கக் கூடிய உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்பார்த்து, பழனிசாமி தரப்பு, 'திக் திக்' மன நிலையில் காத்திருக்கிறது.
அ.தி.மு.க.,வில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளாக செயல்படுவதாலும், கட்சி யாருக்கு சொந்தம் என்ற வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாலும், அக்கட்சிக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கவுரவ பிரச்னை
கடந்த முறை அந்த தொகுதியில், அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட, த.மா.கா.,வுக்கு மீண்டும் வாய்ப்பு தராமல், தன் ஆதரவாளரை களமிறக்க பழனிசாமி முடிவெடுத்துள்ளார். கட்சியை தன் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வர, இது பெரிய வாய்ப்பாக இருக்கும் என கணக்கு போடுகிறார்.
எனவே, இடைத்தேர்தலில் சின்னம் கிடைக்காவிட்டாலும், தி.மு.க.,வுடன் மோதி பார்த்து விடுவது என முடிவு செய்துள்ளார். தேர்தல் அறிவித்ததும், தன் காய் நகர்த்தலை துவக்கினார். நேரடியாக த.மா.கா., தலைவர் வாசனிடம் தொலைபேசியில் பேசினார்.
'காங்கிரஸ் போட்டியிட்டாலும், தி.மு.க., இடைத்தேர்தல் வெற்றியை கவுரவ பிரச்னையாக பார்க்கும். எனவே, அதிகாரத்தை பயன்படுத்துவதோடு, பணத்தை அள்ளி விடும். அதற்கு ஈடுகொடுக்க, அ.தி.மு.க., வேட்பாளர் களம் இறங்குவதே நல்லது' என தெரிவித்துள்ளார்.
சின்னம் பெற முயற்சி
அதோடு, முன்னாள் அமைச்சர்கள் நான்கு பேரை, அவரது வீட்டிற்கு அனுப்பி பேசவும் வைத்தார். அதை, வாசனும் ஏற்றுக் கொண்டார். 'அ.தி.மு.க.,வே போட்டியிடும்' என, பழனிசாமி விருப்பப்படி அறிவித்தும் விட்டார். மற்றொரு கூட்டணி கட்சியான பா.ஜ.,வுடன் பேச, பழனிசாமி தரப்பு முடிவு செய்துள்ளது.
அ.தி.மு.க., வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தாலும், உயர் நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில், இரட்டை இலை சின்னத்தை பெற முயற்சிகளை துவக்கி உள்ளனர். பன்னீர்செல்வமும் வேட்பாளரை நிறுத்தி, முட்டுக்கட்டை போட்டால் சின்னம் கிடைப்பது சிக்கலாகும்.
இதற்கிடையில், உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கில், 24ல் தீர்ப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது. அந்த தீர்ப்பை எதிர்பார்த்து, 'திக் திக்' மனதுடன் காத்திருக்கின்றனர்.
தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வந்தால், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதில் சிக்கல் வராது. இல்லையெனில், சுயேச்சை சின்னத்தில் வேட்பாளரை களம் இறக்கி விடுவது என்பதில் பழனிசாமி உறுதியாக உள்ளார். அதற்கான பணிகளையும், அவரது தரப்பு துவக்கி உள்ளது.
இரண்டாம் இடம்
வெற்றி பெற முடியாவிட்டாலும், இரண்டாம் இடத்தை பிடித்து விட முடியும். இதன் வழியாக, அ.தி.மு.க., முழுமையாக தன் கட்டுப்பாட்டில் உள்ளதை ஒப்புக் கொள்ள வைக்க முடியும்.
அதன்பின், கட்சி, சின்னம் அனைத்தையும் பெற்று விடலாம் என்பதே பழனிசாமியின் கணக்காக உள்ளது. இதற்கு, பன்னீர்செல்வம் தரப்பு என்ன எதிர்வினையாற்றப் போகிறது என்பது இன்று தெரியும்.
உயர் நீதிமன்ற தீர்ப்பு
இது குறித்து, பழனிசாமி ஆதரவு அ.தி.மு.க., நிர்வாகி ஜெயகுமார் அளித்த பேட்டி:
தி.மு.க., ஆதரவோடு காங்கிரஸ் களம் இறங்கும் நிலையில், அ.தி.மு.க., எதிர்த்து நிற்பது தான் சிறந்தது. இந்த முடிவை எடுத்த வாசனுக்கு நன்றி. இரட்டை இலை சின்னத்தை பெறுவோம்.
தற்போது, சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு தான் செல்லும். கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி இல்லை என்பதை, தேர்தல் கமிஷனுக்கு தெரியப்படுத்தி உள்ளோம். கட்சி ஒற்றுமையாக உள்ளது. எனவே, தேர்தல் கமிஷன் எங்களுக்கு இரட்டை இலை சின்னத்தை வழங்கும். இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -