உடுமலை:விருகல்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில், பயிர்க்கடன் வழங்குவதில் இழுபறி நீடிப்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்த கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க குடிமங்கலம் ஒன்றிய கமிட்டி சார்பில், கூட்டுறவுத்துறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனு: குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், பயிர்க்கடன் வழங்குவதில் இழுபறி நீடிக்கிறது.
குறிப்பாக, விருகல்பட்டிபுதுார் கே.752 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில், 75க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்காமல் இழுத்தடித்து வருகின்றனர்.
மேலும், இச்சங்கத்தில், முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. எனவே, இச்சங்க செயல்பாடுகள் குறித்து, விவசாயிகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
எனவே, கூட்டுறவுத்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி, டெபாசிட், நகை அடமானம் உள்ளிட்ட பரிவர்த்தனைகள் குறித்து அறிக்கை வெளியிட வேண்டும்.
இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.