உடுமலை:உடுமலை ஒன்றியம், வட்டார வள மையம் சார்பில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் சார்ந்த விழிப்புணர்வு பேரணி, சிவசக்திகாலனி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்தது. வட்டார கல்வி அலுவலர்கள் ஆறுமுகம், மனோகரன், சரவணக்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். அப்பள்ளித் தலைமையாசிரியர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து, பேரணியில் பங்கேற்ற மாணவர்கள், 'அனைவரும் கற்போம் அனைவரும் உயர்வோம்', 'கல்வி கற்பதற்கு வயது ஒரு தடையே இல்லை', 'ஏட்டுக்கல்வி ஏற்றம் தரும்', என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு பதாகைகளைக் கைகளில் ஏந்தியவாறு ஊர்வலமாகச்சென்றனர்.
நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற பேரணி, மீண்டும் பள்ளியைச் சென்றடைந்தது. இல்லம்தேடி தன்னார்வலர்கள், புதிய பாரத எழுத்தழிவு திட்ட தன்னார்வர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை, பொறுப்பு ஆசிரியர் பயிற்றுநர் சண்முகசுந்தரம் செய்திருந்தார்.