திருவாடானை : திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் உள்ள 32 கூட்டுறவுசங்கங்களில் கால்நடைகள் பராமரிப்பிற்காகவும், மீன்கள் வளர்க்கவும் வட்டியில்லா கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
கால்நடை வளர்ப்பவர்கள் மற்றும் மீனவர்களின் வருவாயை உயர்த்தும் வகையிலும், கந்துவட்டி கொடுமையில் இருந்து அவர்கள் விடுபடவும் கால்நடை வளர்ப்பிற்கான கடன் உதவி திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துஉள்ளது.
இது குறித்து கூட்டுறவு சார்பதிவாளர் ஆனந்த் கூறியதாவது:
கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு ஒரு மாட்டிற்கு ரூ. 14,000, ஒரு ஆட்டிற்கு ரூ.1000 ம் வழங்கப்படும். ஆடு, மாடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கடன் வழங்கபடும். ஒரு ஆண்டிற்கு வட்டியில்லை. ஒரு கூட்டுறவு சங்கத்திற்கு தலா ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கால்நடை வளர்ப்போர் கால்நடை டாக்டரிடம் மாடுகளின் எண்ணிக்கை மற்றும் உடல்நிலை சான்றிதழ் வாங்கி சங்கத்தில் கொடுக்கலாம். கடற்கரை ஓரங்களில் வசிக்கும் மீனவர்களுக்கு மீன் வளர்ப்பு திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் அருகில் உள்ள கூட்டுறவு சங்கங்களை அணுகி பயன்பெறலாம், என்றார்.