மாமல்லபுரம்:மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே, தேசிய நெடுஞ்சாலை, நான்கு வழிப் பாதையாக மேம்படுத்தப்படுகிறது. முதல் கட்டமாக, மாமல்லபுரம் - முகையூர் இடையே, பணிகள் நடக்கின்றன.
பழைய சாலையை, சில ஆண்டுகளாக பராமரிக்காததால் சீரழிந்த நிலையில் உள்ளது.
புதிய சாலை அமைக்கும் பணிகள் சில நாட்கள் நீடிக்கும் என்பதால், தற்போது, மாமல்லபுரத்தில் இருந்து கல்பாக்கம் அருகில் உள்ள வெங்கப்பாக்கம் வரையிலான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
மாமல்லபுரம் - வெங்கப்பாக்கம் இடையே கடக்கும் வாகனங்கள் அனைத்தும், மாற்றுப்பாதையில், திருக்கழுக்குன்றம் வழியே செல்ல, நெடுஞ்சாலை ஆணையம் அறிவுறுத்திஉள்ளது.
கல்பாக்கம் நகரிய பகுதியை ஒட்டி, புதுப்பட்டினத்தில், 2 கி.மீ., கடக்கும் பழைய கிழக்கு கடற்கரை சாலை, பராமரிப்பின்றி முற்றிலும் சீரழிந்துள்ளது.
இதை சீரமைக்கக்கோரி, புதுப்பட்டினம் ஊராட்சி தலைவர் காயத்ரி உள்ளிட்டோர், பூந்தண்டலம் பகுதியில், நேற்று சாலை மறியல் செய்ய முயன்றனர். சதுரங்கப்பட்டினம் போலீசார், அவர்களை சமாதானப்படுத்தினர்.
தேசிய நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனத்திடம் பேசி, சாலையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதி அளித்ததைத் தொடர்ந்து, மறியலை கைவிட்டு மக்கள் கலைந்தனர்.