கமுதி : கமுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பரமக்குடி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பத்ம பிரியா வாகன சோதனையில் ஈடுபட்டு அபராதம் விதித்தார்.
முதுகுளத்தூரில் இருந்து பேரையூர், கருங்குளம், கோட்டைமேடு வழியாக கமுதிக்கு காலை நேரத்தில் தனியார் பஸ் சென்றது. இந்த வழித்தடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் அரசு பஸ் இல்லாததால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆபத்தான முறையில் தனியார் பஸ் கூரையில் ஏறியும், படிக்கட்டுகளில் தொங்கியும் பயணம் செய்தனர்.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக கமுதிபோலீசார் தனியார் பஸ் டிரைவர் மகேந்திரன், கண்டக்டர் முத்து இருளாண்டி மீது வழக்கு பதிந்தனர்.
இந்நிலையில் கமுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பரமக்குடி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பத்ம பிரியா வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது 2 நாட்களுக்கு முன்பு போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட தனியார் பஸ்சுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தார்.
பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோக்கள், உரிய ஆவணங்கள் இல்லாமல் சென்ற வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. இனி வரும் நாட்களில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்று பத்மபிரியா கூறினார்.