அருப்புக்கோட்டை : திருச்சுழி அருகே எம் ரெட்டியாபட்டி புதூரை சேர்ந்தவர் சிவக்குமார், 51, நேற்று முன்தினம் இரவு 7:40 பணிக்கு செல்வதற்கு சைக்கிளில் சென்ற போது, கத்தாளம்பட்டி அருகில் எதிரே வந்த பைக் மோதியதில் படுகாயம் அடைந்தார். அங்கு உள்ளவர்கள் பார்த்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். போலீசாரும் அங்கு வந்து விட்டனர்.
ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் ஆம்புலன்ஸ் வராததால், போலீசார் அவரை அந்த வழியாக வந்த ஒரு லோடு வேனில் ஏற்றி அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்குஅனுப்பி வைத்தனர். அவரின் நிலைமை மோசமாக இருக்கவே பந்தல்குடியிலிருந்து 108 ஆம்புலன்ஸ் வரவைத்து அதில் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கல்குறிச்சி செல்லும் வழியில் அவர் இறந்து விட்டார்.
இதுகுறித்து ஊர்மக்கள் கூறுகையில், 108 ஆம்புலன்ஸ் சிற்க்கு தகவல் கொடுத்தும் 1 மணி நேரத்திற்கு மேல் ஆகியும் வரவில்லை. எங்கள் பகுதியில் அடிக்கடி விபத்து நடக்கிறது. ஆனால் இரவு நேரத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை நிறுத்தப்பட்டு விட்டதால், வேறு ஒரு ஊரில் இருந்து வரவழைத்து கொண்டு செல்வதற்குள் பாதிக்கப்பட்டவர் நிலைமை மோசமாகி விடுகிறது. உடனடியாக ஆம்புலன்ஸ் வந்திருந்தால் இறந்தவரை காப்பாற்றி இருக்கலாம் என கூறினர்.
108 மாவட்ட மேலாளர் ரஞ்சித் கூறியதாவது: திருச்சுழி, நரிக்குடி பகுதிகளில் தலா ஒரு ஆம்புலன்ஸ் என 2 ஆம்புலன்ஸ்கள் முழுநேரமும் இயங்கி வருகின்றன. ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து அரசு மருத்துவமனைக்கும், விருதுநகர் அரசு மருத்துவமனையில் இருந்து மதுரை அரசு மருத்துவமனைக்கும் நோயாளிகளை கொண்டு ஆம்புலன்ஸ் சென்றிருக்கலாம். வேறு கேஸில் முன்கூட்டியே சென்றிருந்தாலும் தாமதம் ஆகலாம். ஆனால் நிச்சயம் ஆம்புலன்ஸ் அழைக்கப்பட்ட இடத்திற்கு சென்றிருக்கும், என்றார்.