ராமநாதபுரம் : விசைப்படகுகளின் இரட்டை மடி, கரையோர மீன்பிடிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தி ராமநாதபுரத்தில்கலெக்டர் முன் மீனவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மீனவர்கள் குறை தீர்க்கும் முகாம் நடந்தது. கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை வகித்தார். மீன்வளத்துறை துணை இயக்குனர் காத்தவராயன் முன்னிலை வகித்தார். இதில், கடல் தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யு.,) மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி தலைமையில் மீனவர்கள் பங்கேற்றனர்.
அவர்கள், விசைப்படகுகள் கரையோரங்களில் மீன்பிடிப்பதால் நாட்டுபடகு வலைகள் அறுந்து விடுகின்றன. சட்ட விரோத சுருக்குமடி, இரட்டை மடி மீன்பிடிப்புகளை தடுக்க வேண்டும். துணை போகும் மீன்வளத்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி கலெக்டர் முன் தரையில் அமர்ந்தனர். கரைவலை நாட்டு படகில் மீன்பிடிக்கும் மீனவர்களும் தர்ணாவில் ஈடுபட்டனர்.
அப்போது விசைப்படகு மீனவர்களும் அந்த மாதிரி நடக்கவில்லை,என கூச்சலிட்டனர். அப்போது முறையாக ஆய்வு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், என கலெக்டர் கூறியதையடுத்து மீனவர்கள் எழுந்து சென்றனர்.
மாவட்ட நாட்டு படகு மீனவர் நலச்சங்கத்தினர் மீனவர்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் சேதுசமுத்திர திட்டத்தால் பவளப்பாறைகள், அரியவகை மீன்கள் அழியும். கடல் மாசுபடும். எனவே சேதுசமுத்திர திட்டத்தை அரசு நிறுத்த வேண்டும். பாம்பன் வடக்கு கடற்கரையில் துாண்டில் வளைவுடன் கூடிய ஒருங்கிணைந்த மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும், என மனு அளித்தனர்.
தோப்புக்காடு கிராம தலைவர் பாலுச்சாமி, அரசின் அனுமதியின்றி சட்ட விரோதமாக செயல்படும் தனியார் உல்லாச கேளிக்கை விடுதியை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தினாார்.