காரியாபட்டி: காரியாபட்டி அருகே தனியார் மருத்துவக்கழிவு ஆலைக்கு கழிவுகளை ஏற்றி வரும் வாகனங்கள் முடுக்கன்குளம் வழியாக வர தடை விதிக்கப்பட்டு சமாதான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
காரியாபட்டி முடுக்கன்குளத்தில் தனியார் மருத்துவக் கழிவு ஆலைக்கு, 6 மாவட்டங்களில் இருந்து மருத்துவ கழிவுகளை ஏற்றி வரும் வாகனங்கள் முடுக்கன்குளம் வழியாக வந்து செல்கின்றன.
வரும் வழியில் ஆங்காங்கே மருத்துவ கழிவுகளை சிதற விட்டு செல்கின்றனர். இதனால் தொற்றுநோய் பரவும் என அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.
நேற்று முன் தினம் மருத்துவ கழிவுகளை அடங்கிய மூடை ஒன்று முடுக்கன்குளம் பஸ் ஸ்டாப் அருகே சிதறவிட்டுச் சென்றதால் ஆத்திரமடைந்த கிராமத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.
நேற்று ஏ.டி.எஸ்.பி., சோமசுந்தரம் தலைமையில். திருச்சுழி டி.எஸ்.பி., ஜெகநாதன், வருவாய் அதிகாரிகள் முன்னிலையில் சமாதான கூட்டம் நடந்தது. அதில் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அடுத்து ஆலையை புதுப்பிக்கும் வரை செயல்படுத்துவது என்றும், அதுவரை முடுக்கன்குளம் வழியாக வாகனங்களை இயக்க வேண்டாம் என்றும் முடிவு செய்யப்பட்டது. மாற்று பாதையில் இயக்க சம்மதம் தெரிவிக்கப்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.