காரியாபட்டி : சேதமான கட்டடங்கள், கட்டியும் பயன்பாடில்லாத காத்திருப்போர், சுற்றுசுவர் இல்லை என்பதுட்பட பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி தவிக்கிறது காரியாபட்டி முடுக்கன்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மக்கள்.
காரியாபட்டி முடுக்கன்குளத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 30 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. எஸ்.மறைக்குளம், தேனூர், சூரனூர், சத்திரம் புளியங்குளம், அல்லாளப்பேரி, அ. தொட்டியன்குளம், வேப்பங்குளம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இங்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர். கர்ப்பிணிகளுக்கு பிரசவ வார்டு 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. இரு செவிலியர்கள் அரசு குடியிருப்பில் தங்கி உள்ளனர். ஒரு மருத்துவர் பணியாற்றி வருகிறார். தினமும் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர். போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் சிரமப்பட்டு வருகின்றனர்.
பிரச்னை
இங்குள்ள கட்டடங்கள் கட்டப்பட்ட சில ஆண்டுகளிலேயே தரை மட்டத்தில் சேதம் அடைந்து வருகிறது. வரண்டாவில் சிமின்ட் பூச்சு உடைந்து உள்ளதால் ஏறிச் செல்ல முடியாத நிலை உள்ளது. காத்திருப்பு அறை பயன்பாடு இன்றி இருப்பதால் நோயாளிகள் ஓய்வு எடுக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். காத்திருப்பு அறையில் மினரல் பிளான்ட் அமைக்கப்பட்டுள்ளது. பயன்பாடு இன்றி போடப்பட்டுள்ளதால் குப்பை நிறைந்து காணப்படுகின்றன. ஆரம்ப சுகாதார நிலையம் கண்மாயை ஒட்டி அமைந்துள்ளது. நீர் நிரம்பும் பட்சத்தில், கட்டடங்களை சுற்றி நீர் சூழும் நிலை உள்ளது. பின்புறம் சுற்றுச்சுவர் கிடையாது. நடந்து செல்ல அமைக்கப்பட்ட பேவர் பிளாக் பாதை மேடாக உள்ளது. பள்ளத்தில் இடறி விழும் சூழ்நிலைகள் உள்ளதால் நோயாளிகள் அச்சத்தில் உள்ளனர்.
மங்களநாதன், விவசாயி: அதிக அளவிலான நோயாளிகள் வந்து செல்கின்றனர். கூடுதல் டாக்டர் நியமிக்க வேண்டும். எந்த கருவிகளும் கிடையாது. அவசரத்திற்கு காரியாபட்டி, மதுரைக்கு செல்ல வேண்டி உள்ளது. இப்பகுதியில் சிறுநீரக பாதிப்பு அதிக அளவில் ஏற்பட்டு வருகிறது. அதற்கு தனியாக சிகிச்சை அளிக்க டாக்டர் நியமிக்க வேண்டும். காரியாபட்டிக்கும் நரிக்குடிக்கும் மையப்பகுதியில் இருப்பதால் ஆத்திர அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் வருவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு, ஆம்புலன்ஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுந்தரம், விவசாயி: காத்திருப்பு அறையில் தூய்மை இல்லாமல் இருப்பதால் நோயாளிகள் அமருவதில் சிரமம் ஏற்படுகிறது. மினரல் பிளான்ட் செயல்பாடு இன்றி இருப்பதால் குடிநீருக்கு நோயாளிகள் சிரமப்படுகின்றனர். கட்டடங்கள் சேதம் அடைந்து வருகின்றன. பின்புறத்தில் சுற்றுச்சுவர் இல்லாததால் விஷ பூச்சிகள் வரும் வாய்ப்பு உள்ளது. அதிக கிராமங்களை கொண்ட பகுதி. இரவு நேரங்களில் போக்குவரத்து வசதி கிடையாது. ஆத்திர, அவசரத்திற்கு எங்கும் செல்ல முடியாத நிலை உள்ளதால், மருத்துவமனையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தீர்வு
இப்பகுதியில் சிறுநீரக பாதிப்பால் ஏராளமானவர் சிரமப்படுகின்றனர். சிறுநீரக சிகிச்சை அளிக்க கூடுதல் டாக்டர் நியமிக்க வேண்டும். மேடு பள்ளமாக உள்ள பாதைகளை சீராக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதம் அடைந்த கட்டடங்களை சீரமைக்க வேண்டும். செயல்படாத மினரல் பிளான்ட், காத்திருப்பு அறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.