தளவாய்புரம் : தளவாய்புரத்தில் கூலி உயர்வு வழங்காத உற்பத்தியாளர்களை கண்டித்து விசைத்தறி தொழிலாளர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தளவாய்புரத்தில் சேலை உற்பத்தி செய்யும் 600 க்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலி உயர்வு குறித்த ஒப்பந்தம் கடந்த 2021 ஆக. மாதம் முடிவடைந்து விட்டது.
ஒப்பந்தம் காலாவதி ஆகி 18 மாதங்கள் கடந்தும் புதிய கூலி உயர்வு வழங்கப்படவில்லை.
இதுகுறித்து ஸ்ரீ பத்ரகாளியம்மன் விசைத்தறி துணி உற்பத்தியாளர் சங்கம் மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கபடவில்லை.
இதனைக் கண்டித்தும், புதிய கூலி உயர்வு கோரியும் விசைத்தறி தொழிலாளர்கள் நேற்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதுடன் செட்டியார்பட்டி வரை ஊர்வலமாக வந்து கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.