சேலம்:பொங்கல் பண்டிகையில் பஸ் பயணியரிடம் திருட, ஆந்திராவில் இருந்து, 30 பேர் களம் இறங்கிய நிலையில், மூவரை பயணியர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம், 10 மொபைல் போன்கள் மீட்கப்பட்டன.
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் சந்தோஷ், 32; இரும்பு கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:30 மணிக்கு சேலம் புது பஸ் ஸ்டாண்ட் வந்தார்.
மர்ம நபர்
பழைய பஸ் ஸ்டாண்ட் செல்ல, டவுன் பஸ்சில் ஏறிய போது, அவரது பேன்ட் பாக்கெட்டில் இருந்த, 'ரெட்மி நோட்' மொபைல் போனை மர்ம நபர், 'அபேஸ்' செய்தார்.
சந்தோஷ் கவனித்து கூச்சலிட, சக பயணியர் மர்ம நபரை பிடித்து, பள்ளப்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அந்த நபர் ஆந்திராவைச் சேர்ந்த தருண், 20, என, தெரிந்தது.
அதேபோல, கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே பூண்டி அமையகரத்தைச் சேர்ந்த சேட்டு, 33, என்பவர் நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு, தனியார் பஸ்சில் சேலம் புது பஸ் ஸ்டாண்ட் நுழைவாயில் அருகே வந்தார்.
அப்போது, அவரது பையில் இருந்த, 'விவோ' மொபைல் போனை இரு சிறுவர்கள் திருட முயன்றனர். இதை கவனித்த பயணியர், சிறுவர்களை பிடித்து, பள்ளப்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் ஆந்திராவைச் சேர்ந்த, 14, 15 வயது சிறுவர்கள் என, தெரிந்தது.
உஷார்
பயணியர் தாக்கியதால் காயமடைந்த திருடர்கள் மூவரும், போலீஸ் பாதுகாப்புடன் சேலம் அரசு மருத்துவமனையில் உள்ளனர். அவர்களிடம் விசாரித்த போலீசார், விலை உயர்ந்த, 10 மொபைல் போன்களை மீட்டனர்.
போலீசார் கூறியதாவது:
பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லும் பயணியரின் மொபைல் போன், மடிக்கணினியை திருட, ஆந்திரா மாநிலம் அனந்தபூரில் இருந்து, 30 பேர் தமிழக முக்கிய நகரங்களுக்கு வந்துள்ளனர்.
இதனால் அந்த கும்பலின் நடமாட்டம் குறித்து, சேலம் மாநகர போலீசார், அனைத்து மாநகர, மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்து உஷார்படுத்தப்படுத்தி உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.