ஈரோடு அரசு மருத்துவமனை அருகே இயங்கி வரும் உணவகம் ஒன்றில், நோயாளிகளின் காப்பாளர்களுக்காக தரமான உணவை, 1 ரூபாய்க்கு வழங்கி வரும் பணியை, 15 ஆண்டுகளுக்கும் மேலாக செய்து வரும் வெங்கட்ராமன்: அரசு மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு, அங்கேயே உணவு வழங்கப்படுகிறது.
ஆனால், நோயாளிகளை அருகில் இருந்து கவனித்துக் கொள்ளும் உறவினர்கள், கடைகளில் அதிக விலை கொடுத்து, உணவு வாங்க வேண்டிய சூழல் நிலவுகிறது.
இதனால், மருத்துவ மனையில் நோயாளிகளுடன் தங்கி இருப்பவர்களுக்கு, உணவு வழங்க தீர்மானித்தோம். இலவசமாக வழங்கினால், அதற்கு மதிப்பு இருக்காது; எனவே, 1 ரூபாய் மட்டும் வாங்கி, சாப்பாடு வழங்கலாம் என்று முடிவெடுத்தோம்.
மருத்துவமனையில் உள்ள அனைவருக்கும் எங்களால் உணவு வழங்க முடியாது என்பதால், ஒரு மினி ஆய்வு செய்து, மருத்துவமனையில் உள்நோயாளிகளாக நீண்ட நாட்கள் தங்கி சிகிச்சை பெறும் நோயாளியுடன் இருக்கும் காப்பாளர்களுக்கு, 1 ரூபாய்க்கு சாப்பாடு வழங்க முடிவெடுத்தோம்.
அதே நேரம், 1 ரூபாய்க்கு சாப்பாடு என்பதால், தரம் குறைவாக இருக்கும் என்று எண்ணி விட வேண்டாம்.
எங்கள் உணவகத்தில், 70 ரூபாய் கொடுத்து ஒருவர் சாப்பிடுகிறார் என்றால், அதே சாப்பாட்டை தான் 1 ரூபாய்க்கு ஏழை, எளியோருக்கு வழங்குகிறோம். மதியம் மட்டும் அல்ல... காலை மற்றும் இரவு டிபன் கூட 1 ரூபாய்க்கு தான் வழங்குகிறோம்.
ஒரு நாளைக்கு, 20 பேர் வீதம், மூன்று வேளையும் தலா 1 ரூபாய்க்கு உணவு வழங்கி வருகிறோம்; இந்த சேவையை, 15 ஆண்டுகளுக்கும் மேலாக செய்து வருகிறோம்.
ஏழை, எளியோருக்கு சாப்பாடு மட்டுமல்லாமல், துண்டு, 'பெட்ஷீட், ஸ்வெட்டர்' உள்ளிட்டவற்றையும் இலவசமாக வழங்குகிறோம். மாற்றுத்திறனாளிகள் வந்து சாப்பிட்டால், 20 சதவீதம் தள்ளுபடி தருகிறோம்.
எங்களின் சேவையை பாராட்டி, தமிழகம் எங்கும் பல்வேறு ஊர்களில் இருந்தும், 'ஸ்பான்சர்'கள் உதவுகின்றனர்.
தங்கள் வீடுகளில் நடக்கும் விசேஷங்களுக்கு அன்னதானம் செய்ய நினைப்பவர்கள், இங்கு வந்து 1 ரூபாய் சாப்பாடு திட்டத்துக்கு பங்களிப்பை தருவர்; அவர்களிடம் பணம் மட்டும் வாங்கி, நாங்களே சமைத்து வழங்குகிறோம்.