புதுக்கோட்டை:மொபைல் போனில் பேசி மூவரிடம், 44.64 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக, புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.
புதுக்கோட்டை, பூங்கா நகரைச் சேர்ந்தவர் குருசபரிஷ், 24. இவர் வெளிநாட்டுக்கு எண்ணெய் வகைகளை அனுப்பும் தொழில் செய்கிறார்.
கடந்த ஆண்டு அக்டோபரில், அவரது மொபைல் போனுக்கு, ஸ்பெயின் நாட்டிலிருந்து பேசுவதாகவும், தங்கள் மருத்துவமனைக்கு டாஸ்மானியா ஆயில் தேவைப்படுவதாகவும் பேசியுள்ளனர்.
அதற்கு, குருசபாரிஷ், தன்னிடம் அந்த ஆயில் இல்லை என, கூறியுள்ளார். அடுத்த சில நாட்களில், குருசபரிஷுக்கு இன்னொரு அழைப்பு வந்தது. அதில் பேசியவர், டாஸ்மானியா ஆயில், மும்பையில் இருப்பதாக தெரிவித்தார்.
உடனே குரு, ஸ்பெயின்ஆர்டரை நம்பி, மும்பை நிறுவனத்தில் ஆயில் வாங்க ஒப்பந்தம் செய்து, எட்டு தவணைகளில், 16.20 லட்சம் லட்சம்அனுப்பி, ஆயில் வாங்கினார்.
அதன் பின், ஸ்பெயின்நாட்டிலிருந்து எந்த போனும் வரவில்லை. குரு தொடர்பு கொண்டபோது, பதிலும் இல்லை.
இதனால், கொள்முதல்செய்த ஆயிலை, மும்பை நிறுவனத்திற்கு திரும்ப அனுப்ப முயற்சி செய்தபோது, அவர்களையும்தொடர்பு கொள்ள முடியவில்லை.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த குருசபரிஷ், புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீசில் நேற்று புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
இதே போல, புதுக்கோட்டை காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார், 54, என்பவரிடம், அவரது இடத்தில் மொபைல் டவர் அமைக்க வாய்ப்பு வழங்குவதாக கூறி, மொபைல்போனில் சிலர் பேசி உள்ளனர்.
அதை நம்பி சிவக்குமாரும், மொபைல் டவர் அமைக்கும் ஆர்டரை பெற, பல்வேறு தவணைகளாக, 11.94 லட்சம் ரூபாயை, 'ஆன்லைன்' மூலம் அனுப்பி உள்ளார். அவர்கள் பணத்தை பெற்ற பின், சிவக்குமாரால் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.
ஏமாற்றம் அடைந்த சிவக்குமார், புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரின் படி, போலீசார் விசாரிக்கின்றனர்.
கந்தர்வகோட்டையைச் சேர்ந்த ராஜேந்திரன், 34, என்பவரிடம், ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால், அதிக வருமானத்தை ஈட்ட முடியும் என ஆசை வார்த்தை கூறியதால், அவர், ஆன்லைன் மூலம், 16.50 லட்சம் ரூபாய் செலுத்தி உள்ளார்.
ஆனால் கூறியபடி, அவருக்கு எந்த தொகையையும் திரும்ப கொடுக்கவில்லை. இதுகுறித்து ராஜேந்திரன் அளித்த புகாரின் படி, புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.