கச்சிராயபாளையம்:கல்வராயன்மலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், பிரசவத்தில் தாய், சேய் இறந்ததால், ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலையில்உள்ள ஆலனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்யராஜ், 28. இவரது மனைவி மல்லிகா, 24; கூலித் தொழிலாளிகள்.
பரிசோதனை
ஓராண்டுக்கு முன் திருமணம் நடந்த நிலையில், கருவுற்ற மல்லிகா, சேராப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடர் பரிசோதனை செய்து வந்தார்.
நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு, நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அவரை, சேராப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உறவினர்கள் அனுமதித்தனர்.
பணி மருத்துவர் வீட்டிற்கு சென்று விட்ட நிலையில், இரவு, 8:30 மணிக்கு மல்லிகாவிற்கு பெண் குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தை, பத்து நிமிடத்தில் இறந்து விட்டது.
பிரசவம் பார்த்த செவிலியர் மற்றும் உதவியாளர்கள், கிளாக்காடு சுகாதார நிலையத்திற்கு சென்று, ரத்தப்போக்கை நிறுத்தும் மருந்தை வாங்கி வரும்படி, மல்லிகாவின் உறவினர்களிடம் கூறினர்.
இரவு, 9:30 மணிக்கு மல்லிகாவும் இறந்து விட்டார். தொடர்ந்து செவிலியர் மற்றும் பணியாளர்கள், உறவினர்களை வெளியேற்றி விட்டு, கதவை தாழிட்டுக் கொண்டனர்.
அதிகாலை, 1:00 மணிக்கு மேல், சுகாதார நிலையத்திற்கு பணி மருத்துவர் வந்தார். ஆத்திரமடைந்த இறந்த பெண்ணின் உறவினர்கள், சுகாதார நிலையத்தில் இருந்த இருக்கை, 'டிவி' உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தினர்.
தொடர்ந்து அவரது உறவினர்கள் மற்றும் பொது மக்கள், நேற்று அதிகாலை, 5:00 மணி முதல், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன் மறியலில் ஈடுபட்டனர்.
சமாதானம்
சம்பவ இடத்திற்கு வந்த கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி., ரமேஷ் மற்றும் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், மல்லிகாவின் உறவினர்களை சமாதானப்படுத்தினர்.
'இரண்டு பேர் உயிர் இழக்க காரணமான பணி மருத்துவர், பிரசவம் பார்த்த செவிலியர் மற்றும் பணியாளர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்' என, அவர்கள் வலியுறுத்தினர்.
ஆர்.டி.ஓ., பவித்ரா உறுதி அளித்ததை அடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், சேராப்பட்டு - மூலக்காடு சாலையில் ஏழு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்ப்டடது. கரியாலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.