திருப்பாச்சேத்தி : திருப்பாச்சேத்தி - படமாத்தூர் ரோட்டில் குற்றச்சம்பவங்கள் அதிகமாக நடப்பதால் சர்க்கரை ஆலையை ஒட்டி புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
திருப்பாச்சேத்தி காவல்நிலைய எல்லை படமாத்தூர் வரை உள்ளது.இச்சாலையில் மாத்தூர், கண்ணாரிருப்பு, சர்க்கரை ஆலை உள்ளிட்டவை அமைந்துள்ளன. இதில் சர்க்கரை ஆலையில் அரவை நடைபெறும் போது பல்வேறு பகுதிகளில் இருந்தும் வாகன ஓட்டுனர்கள் , உதவியாளர்கள் என வெளிநபர்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.
சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பணி முடிந்து வரும் கிராம மக்களை சிலர் அச்சுறுத்தி இப்பகுதியில் வழிப்பறி செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. இச்சாலையில் உள்ள பெட்ரோல் பங்க்கிலும் கொள்ளைச் சம்பவங்கள் நடந்துள்ளன.
இப்பகுதியில் பதிவேடு குற்றவாளிகளின் எண்ணிக்கையும் அதிகம், எனவே அவர்களை கண்காணிக்கவும் குற்றச்செயல்களை தடுக்கவும் சர்க்கரை ஆலையை ஒட்டி புறக்காவல்நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.