திருச்சி:வீட்டு மின் இணைப்பை, வணிக இணைப்பாக மாற்ற, 12 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மின் வாரிய மதிப்பீட்டு ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி, கே.கே.நகரைச்சேர்ந்தவர் சந்தோஷ். இவரது தந்தை பெயரில் உறையூர் பகுதியில் வீடு உள்ளது.
போலீசில் புகார்
அந்த வீட்டை மருத்துவமனைக்கு வாடகைக்கு விட, வீட்டில் இருந்த மின் இணைப்பை, வணிக இணைப்பாக மாற்ற விண்ணப்பம் செய்திருந்தார்.
இதுதொடர்பாக, தென்னுாரில் உள்ள மின் வாரியத்தில், உறையூர் பகுதி மதிப்பீட்டு ஆய்வாளராக பணியாற்றும் ஜெயச்சந்திரனை அணுகினார்.
அவரோ, '15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே மாற்ற முடியும்; இல்லாவிட்டால், வீட்டு மின் இணைப்பில், மருத்துவமனைக்கு மின்சாரம் எடுத்ததாக அபராதம் விதிப்பேன்' என, மிரட்டினார்.
பின் நடந்த பேச்சில், 12 ஆயிரம் ரூபாய் தருவதாக முடிவானது. எனினும், லஞ்சம் தர விரும்பாத சந்தோஷ், நேற்று முன்தினம் மாலை, திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
பறிமுதல்
போலீசார் அறிவுரைப்படி, நேற்று மதியம், லஞ்ச பணத்தை ஜெயச்சந்திரனிடம் சந்தோஷ் கொடுத்த போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், ஜெயச்சந்திரனை கையும், களவுமாக கைது செய்து, லஞ்சப்பணத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும், தென்னுார் மின்வாரிய அலுவலகம் அழைத்துச் சென்று விசாரணையும் நடத்தினர்.