திருநெல்வேலி:காதல் தகராறில் பாலிடெக்னிக் மாணவரை கொலை செய்ததாக, 16 வயது சிறார்கள் மூவரை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை, செல்வமருதுார் காலனியைச் சேர்ந்த தங்கத்துரை மகன் ராஜேந்திரன், 21. பாலிடெக்னிக் மாணவர். கஞ்சா பயன்படுத்தும் சிறுவர்களுடன் பழகியதால் கல்லுாரிக்கு முறையாக செல்லவில்லை.
கடந்தாண்டு அக்., 9ல் நண்பர்களுடன் கோவிலுக்கு சென்ற இவர் வீடு திரும்பவில்லை. போலீஸ் விசாரணையில் முன்னேற்றமில்லை. சில நாட்களுக்கு முன், 16 வயது சிறுவன் ஒருவனை 'டூ - வீலர்' திருட்டு வழக்கில் போலீசார் விசாரித்தனர்.
அச்சிறுவன் கண்காணித்த போது, 'நல்ல வேளை நாம் செய்த கொலையை போலீசார் கண்டுபிடிக்கவில்லை' என, சக நண்பர்களிடம்கூறியுள்ளான். தகவலறிந்த டி.எஸ்.பி.,யோகேஷ்குமார், மீண்டும் சிறுவனிடம் விசாரித்ததில், சிறார்கள் மூவர் சேர்ந்து ராஜேந்திரனை கொலை செய்தது தெரிந்தது.
இவர்களில் ஒருவர் பத்தாம் வகுப்பு மாணவியை ஒரு தலையாக காதலித்துள்ளார். அம்மாணவியுடன் ராஜேந்திரனும் பழக முயற்சித்ததால், கடத்திக் கொன்றது தெரிந்தது. திசையன்விளை அருகே எம்.எல்.தேரி பகுதியில் புதைக்கப்பட்ட ராஜேந்திரன் உடலை எடுத்து, பிரேத பரிசோதனைக்கு போலீசார் ஏற்பாடு செய்தனர்.