சிவகங்கை:மதுரையில் ஓடும் வாடகை காருக்கு, சென்னை போலீசார் அபராதம் விதித்ததால், அதிர்ச்சியுற்ற கார் உரிமையாளர் சிவகங்கை போலீசில் புகார் அளித்தார். விசாரணையில், அதே எண்ணை பயன்படுத்தி, போலியாக இன்னொரு கார், சென்னையில் ஓடுவது தெரிந்தது.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே வேலடிமடை பகுதியைச் சேர்ந்தவர் ஏ.சுந்தரராஜ். இவர் பெயரிலான காரை, அவரது மகன் அழகு, மதுரையில் வாடகைக்கு ஓட்டி வருகிறார். பொங்கலுக்கு பின் ஒரு நாள் சென்னை சென்று வந்தார்.
இந்நிலையில், சுந்தரராஜின் காருக்கு சென்னை மடிப்பாக்கம், பள்ளிக்கரனை, விமான நிலையம், நுங்கம்பாக்கம், துரைப்பாக்கம் பகுதிகளில், 'சிக்னல்' விதிமீறல், போக்குவரத்து விதிமீறல் என, மூன்று மாதங்களாக அடிக்கடி அபராதம் விதிக்கப்படுவதாக சுந்தரராஜின் மொபைல் போனுக்கு குறுஞ்செய்தி வந்தது.
அதுகுறித்து அவர் ஆராய்ந்த போது, அவரின் கார் எண்ணில், போலியாக இன்னொரு கார் சென்னையில் ஓடுவதை அறிந்தார். அதிர்ச்சியுற்ற தந்தையும், மகனும் நேற்று எஸ்.பி., செல்வராஜிடம் புகார் அளித்தனர்.
சுந்தரராஜ் கூறியதாவது:
இரண்டு ஆண்டுகளாக மதுரையைச் சுற்றி மட்டுமே கார் வாடகைக்கு ஓடியது. சென்னையில் இருந்து மூன்று மாதங்களாக பல முறை, 3,000 ரூபாய் வரை அபராதம் விதித்துள்ளனர். அதுகுறித்து விசாரித்த போது, என் கார் எண்ணில் போலியாக சென்னையில் கார் ஓடுவதை அறிந்தேன். எஸ்.பி., செல்வராஜிடம் புகார் அளித்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.