கிருஷ்ணகிரி:''ஜோலார்பேட்டை - ஓசூர் ரயில் பாதை திட்டத்திற்கான திட்ட மதிப்பீடு அறிக்கை தயார் செய்யும் பணிகள் துவங்கியுள்ளன,'' என, கிருஷ்ணகிரி காங்., - எம்.பி., செல்லக்குமார் தெரிவித்தார்.
இதுகுறித்து, நேற்று முன்தினம் அவர் கூறியதாவது:
கிருஷ்ணகிரியில் நிறுத்தப்பட்ட ரயில் சேவைக்காக, 80 ஆண்டுகளாக போராடி வருகிறோம். இது குறித்து ரயில்வே நிர்வாகத்திடமும், மத்திய அரசிடமும் பலமுறை மனு அளித்தோம்.
பல்வேறு நடவடிக்கைகளுக்கு பின், தற்போது ரயில்வே நிர்வாகம், இத்திட்டத்திற்கான திட்ட மதிப்பீடு அறிக்கை தயார் செய்ய, 2.47 கோடி ரூபாயை ஒதுக்கியது.
இந்நிலையில், 101 கி.மீ., துாரத்தை, 98 கி.மீ., என குறைக்கும் திட்டம், 7.75 கி.மீ., குகை பாதையை, 0.75 கி.மீ., என குறைக்கும் வழிமுறைகளை வழங்கியுள்ளோம்.
இதன் வாயிலாக, 2,046 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டு தொகை, 1,496 கோடி ரூபாயாக குறைக்கப்பட்ட உத்தேச திட்ட மதிப்பீடு அறிக்கையை, நாங்கள் ரயில்வே நிர்வாகத்திற்கு கொடுத்துள்ளோம்.
ஜோலார்பேட்டை - குப்பம் - பெங்களூரு ரயில்வே மார்க்கத்தில் கூட்டம் அதிகரித்தாலோ அல்லது இயற்கை சீற்றங்களால் விபத்து ஏற்பட்டாலோ, மாற்றுவழிப்பாதையாக கிருஷ்ணகிரி ரயில் பாதையை பயன்படுத்தலாம்.
இதனால், 20 கி.மீ., மட்டுமே அதிகமாகும். இத்திட்டத்திற்கு ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் அளித்து, 2022, அக்., 25ல் டெண்டர் அறிவிப்பு வெளியான நிலையில், திடீரென நிறுத்தப்பட்டது.
கடந்த நவ., 4ல், மீண்டும் டெண்டர் விடப்பட்டு, நவ., 28ல் தகுதியான மூன்று நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
அதன்படி, ஜன., 2ல், புத்தாண்டு பரிசாக ஜோலார்பேட்டை - கிருஷ்ணகிரி - ஓசூர் ரயில் பாதை திட்டத்திற்கான, இறுதி திட்ட மதிப்பீட்டு அறிக்கை தயார் செய்ய, 'பெங்களூரு ரயில்வே இன்ப்ரா' என்ற நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.
பத்து நாட்களாக, 'சர்வே' வரைபடங்களுடன் இந்த திட்டத்திற்கான இறுதி மதிப்பீடு பணிகளை அந்த நிறுவனம் துவக்கி உள்ளது. மூன்று மாதத்தில் பணிகள் முடிந்து, இறுதி செய்யப்பட்ட திட்ட மதிப்பீடு அறிக்கை மத்திய அரசிடம் வழங்கப்படும்.
வரும் பட்ஜெட் அல்லது அடுத்த பட்ஜெட்டில் கிருஷ்ணகிரி ரயில் பாதை திட்டத்திற்கு, அனுமதி அளிக்கப்பட்டு பணிகள் துவங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.