குன்னுார்:குன்னுாரைச் சேர்ந்த பேராசிரியர்கள் தயாரித்த கொரோனா வைரஸ் தடுப்புக்கான எலக்ட்ரானிக் தொழில்நுட்ப, 'மாஸ்க்' தரம் குறித்து, அமெரிக்க ஆய்வக சோதனையில் வெற்றி கிடைத்துள்ளது.
நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டன் ராணுவ பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ண பிள்ளை, 81. செகந்திராபாத் ராணுவ இன்ஜினியரிங் கல்லுாரியில் பேராசிரியராக பணியாற்றியவர்.
இவரது மனைவி கனகலதா ருத்ரா, 75; ஹைதராபாத் ராணுவ ஆராய்ச்சி மைய பேராசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இருவரும், 2020 கொரோனா ஊரடங்கின்போது, வீட்டில் இருந்தவாறே வைரஸ் தடுப்பு, 'எலக்ட்ரானிக் மாஸ்க்' தயாரித்தனர்.
அமெரிக்காவில், சால்ட்லேக் நகரில் உள்ள நெல்சன் ஆய்வகத்தில், இதை பரிசோதனைக்கு உட்படுத்தியதில், வைரஸ் தடுப்பு திறனில், 98.7 சதவீதம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
ஒய்வு பெற்ற கர்னல் ராமகிருஷ்ண பிள்ளை கூறுகையில், ''சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்ட இந்த எலக்ட்ரானிக் வைரஸ் தடுப்பு மாஸ்கை பயன்படுத்துபவருக்கு, வைரஸ் பாதிப்பு முழுமையாக ஏற்படாது. தொற்று காலங்களில், டாக்டர்கள், விமான பயணியர், இதை பயன்படுத்தினால் சிறந்த கவசமாக அமையும்,'' என்றார்.