சென்னை-சென்னை மெரினா கடற்கரையில், குடியரசு தின விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும், குடியரசு தின விழா, சென்னை மெரினா கடற்கரை, காந்தி சிலை அருகே நடக்கும். தற்போது, அங்கு மெட்ரோ ரயில் பணிகள் நடப்பதால், இந்த ஆண்டு முதல் முறையாக, மெரினா உழைப்பாளர் சிலை அருகே, குடியரசு தின விழாவை நடத்த, அரசு முடிவு செய்துள்ளது.
விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. உழைப்பாளர் சிலை அமைந்துள்ள பகுதியில், மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
அதன் அருகில், பொதுமக்கள் சாலையை கடக்க அமைக்கப்பட்டு உள்ள சுரங்கப்பாதை மேலிருந்த, தடுப்பு சுவர் அகற்றப்பட்டு, அதன் மீது பார்வையாளர் கேலரி அமைக்கப்பட உள்ளது.
அண்ணாதுரை நினைவிடத்தை அடுத்து, கவர்னர், முதல்வர் வாகனம் திரும்ப வசதியாக, சாலை நடுவில் இருந்த தடுப்புச் சுவரை அகற்றும் பணியும் நடந்து வருகிறது.
அணிவகுப்பில் இடம்பெற உள்ள அலங்கார ஊர்திகள் தயாரிப்பு பணியும் வேகமாக நடந்து வருகிறது.
கொரோனா அச்சுறுத்தல் இல்லாததால், இம்முறை குடியரசு தின விழாவில், பொதுமக்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
நேற்று காலை, குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை நடந்தது. முப்படை வீரர்கள், காவல் துறையினர், தீயணைப்புத் துறை வீரர்கள் அணிவகுத்து வந்தனர்.
ஒத்திகையை ஒட்டி, நேற்று காலை அப்பகுதியில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. நாளை இரண்டாவது ஒத்திகை நிகழ்ச்சி நடக்க உள்ளது.