போட்டியில் பங்கேற்க செல்லும் முன், பயிற்சியாளர் சொன்ன விஷயம் இதுதான்... 'வெற்றி, தோல்வி எல்லாம் இரண்டாம் பட்சம். உழைப்பு எப்போதும் வீண் போகாது. இதை தாரக மந்திரமாக கொண்டு செயல்பட்டால், நினைத்ததை அடையலாம்' என்பது தான் அது. எதிர்பார்த்தது நடந்தது அந்த மாணவிக்கு.
சி.பி.எஸ்.இ., பள்ளிகள் அளவில், ஜிம்னாஸ்டிக்ஸ் 'ஏரோபிக்ஸ்', தேசிய விளையாட்டு போட்டி, மகாராஷ்டிரா மாநிலம் சீரடியில் இரு வாரங்களுக்கு முன் நடந்தது. அனைத்து மாநிலங்களில் இருந்தும் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
'பயத்தை போக்கினால் ஜெயம்...' என்பது தானே இலக்கணம். அதை அருமையாக கையாண்டார், கோவை தடாகம் ரோடு, கணுவாய், யுவபாரதி பப்ளிக் பள்ளியில் இருந்து பங்கேற்ற நான்காம் வகுப்பு மாணவி ஸ்ரீநிதி. இவருக்கு முன்னால் திறமை காண்பித்த மாணவ, மாணவியர் முன்னால், 'யாருக்கும் சளைத்தவர் அல்ல நான்' என்று நினைத்துக் கொண்டு, தனிநபர் பிரிவில் தடம் பதித்தார். கையில் கிடைத்தது வெண்கலம். பயிற்சியாளர் மற்றும் மாணவியின் பெற்றோர் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி ரேகை.
மாணவி, விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்சி பெற்று சாதித்தது, இன்னுமோர் சிறப்பு.
விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்சியாளர் சையது இப்ராஹிம் கூறுகையில், ''இரண்டு வருடங்களாக, மாணவி பயிற்சி பெற்று வருகிறார். அவர் சாதித்தது, எங்களுக்கு மிகப்பெரிய கவுரவம். பல போட்டிகளில் பங்கேற்ற அனுபவம், இப்போது இவருக்கு கை கொடுத்திருக்கிறது. படிப்பு போலவே, விளையாட்டிலும் மாணவர்கள் ஆர்வம் செலுத்த வேண்டும். தற்போது ஜிம்னாஸ்டிக் போட்டியில், நிறைய மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்,'' என்றார்.
மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுகுமார், தமிழ்நாடு ஜிம்னாஸ்டிக் சங்க செயலாளர் பாலா உட்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மாணவிக்கு, கழுத்தில் சூடியது பதக்கம் அல்ல. வெற்றி மாலை. தொடரட்டும் அவரது பயணம்.