ஜன., 26ம் தேதி நாடு முழுவதும் குடியரசு தினம் விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர போராட்டம், குடியரசு தினம், மூவர்ணக் கொடி ஆகியவற்றை குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க, இது சரியான நேரம். குழந்தைகளுக்கு பிடித்த செயல்பாடுகள் வாயிலாக, இவற்றை கற்றுக்கொடுப்பதற்கான வழிகள் இதோ...
விரல்ரேகை 'புக்மார்க்'
ஒரு சாட் பேப்பரும், தேசியக் கொடியின் மூவர்ண வண்ணங்களையும் அவர்களிடம் கொடுங்கள். வண்ணங்களை தொட்டு பேப்பர் முழுவதும் விரல் ரேகையை பதிவு செய்யட்டும். இந்த செயல்பாட்டில் ஆர்வமாக ஈடுபடும் போது, மூவர்ணக்கொடியின் முக்கியத்துவத்தை எடுத்து சொல்லுங்கள்.
உங்கள் குழந்தை மற்றும் அவர்களின் நண்பர்களை குழுவாக ஒன்றிணையுங்கள். நாட்டின் வரைபடத்தில், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை தனியாக 'கட்' செய்து அவர்களிடம் கொடுங்கள். நாட்டின் வரைபடத்தை ஒன்று சேர்க்கும் படி குழந்தைகளிடம் சொல்லுங்கள். நாட்டிலுள்ள வெவ்வேறு மாநிலங்களையும், ஒற்றுமையுடன் பணிபுரிவதன் முக்கியத்துவத்தையும் அறிந்து கொள்வார்கள்.
படம் பார்க்கலாம்
சுதந்திர போராட்டம் பற்றி குழந்தைகளுக்கு தெரிவிக்க திரைப்படங்கள் சிறந்த கருவியாகும். வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பல் ஓட்டிய தமிழன், காந்தி, இந்தியன், ஹேராம், பாரதி, மதராசபட்டினம் போன்ற படங்களை, உங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து பாருங்கள். படத்திற்கு இடையே அவர்கள் கேட்கும் கேள்விகள், அனைத்துக்கும் தவறாமல் பதில் சொல்ல நீங்களும் தயாராக இருக்க வேண்டும்.
அணிவகுப்பில் பங்கேற்கலாம்
தொலைக்காட்சிக்கு முன்பு அமர்ந்து, குடியரசு தின அணிவகுப்பை பார்ப்பதற்கு பதிலாக, உங்கள் மாவட்டத்தில், நகரத்தில் நடக்கும் குடியரசு தின விழாவிற்கு குழந்தைகளை அழைத்து செல்லலாம். அணிவகுப்பு, பேண்ட் வாத்தியம், பாடல், நடனம் போன்றவை உங்கள் குழந்தைகளை நிச்சயம் கவரும். நாட்டை பாதுகாக்க, எல்லையில் ராணுவ வீரர்கள் எப்படி பணியாற்றுகின்றனர் என்று சொல்லி மனதில் பதிய வையுங்கள்.
குழந்தைகளுக்கு ஒற்றுமையை கற்பிப்போம்
மதம், இனம், மொழி, கலாசார வேறுபாடுகளை களைந்து, ஒரு பெரிய குடும்பம் போல் ஒன்றாக வாழ்வதே இந்தியாவை தனித்துவமிக்க நாடாக மாற்றுகிறது. இந்த நல்லிணக்கமும், அமைதியும் எதிர்காலத்திலும் அப்படியே இருக்க, வேற்றுமையில் ஒற்றுமையின் மதிப்பை, நம் குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும். இந்த குடியரசு தினத்தை இன்னொரு விடுமுறையாக கழிக்காமல், குழந்தைகளுக்கு தேசப்பற்றை கற்பிப்போம். போனஸாக, குழந்தைகளுடன் ஒன்றாக நாமும் மகிழலாம்!
Advertisement