-நமது நிருபர்-
கடந்த ஆட்சியின்போது திட்டமிடப்பட்ட கோவை மருதமலை ரோடு விரிவாக்கப்பணி, ஆட்சி மாறி ஒன்றரை ஆண்டாகியும், அளவீடுகள் மாற்றப்பட்ட பின்னும், நிலம் கையகப்படுத்தாததால், இன்னும் துவங்காமல் இழுத்துக் கொண்டிருக்கிறது.
தினமும் பல ஆயிரம் வாகனங்கள் செல்லும் கோவை, மருதமலை ரோடு மிகவும் குறுகலாகவுள்ளது. லாலி ரோடு சந்திப்பிலிருந்து வடவள்ளி வரையிலுமான ரோடும், பாரதியார் பல்கலையில் இருந்து மருதமலை வரையிலான ரோடும் ஏற்கனவே விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், இரண்டுக்கும் இடையிலான ரோடு மட்டும் இரு வழிச்சாலையாக இருப்பதால், போக்குவரத்து நெரிசல் அதிகமாகவுள்ளது. அதிலும், நவாவூர் பிரிவு பகுதியில், அடிக்கடி போக்குவரத்து நெரிசல், விபத்து ஏற்படுகிறது.
இதற்கு தீர்வு காணும் வகையில், வடவள்ளி, காளிதாஸ் தியேட்டர் பகுதியிலிருந்து, பாரதியார் பல்கலை வரையிலான 2.5 கி.மீ. துாரமுள்ள ரோட்டை, 22 மீட்டர் அகலத்தில், நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யத் திட்டமிடப்பட்டது. நில ஆர்ஜித பிரேரணை (L.P.S.) தயாரிக்கப்பட்டு, நிலம் கையகப்படுத்துவதற்கு முந்தைய கருத்துக் கேட்புக் கூட்டங்களும் நடத்தப்பட்டன. அந்த அளவீட்டில், நிறைய கட்டடங்கள் இடிபடும் நிலை இருந்தது.
கிளம்பியது புகார்
சில கட்டடங்களைக் காப்பாற்றும் வகையில், ரோட்டின் ஒரு புறத்தில் நெடுஞ்சாலைத்துறை இடம் இருந்தும், மற்றொரு புறத்தில் மட்டும் அதிகக் கட்டடங்களை இடித்து நிலம் கையகப்படுத்த முயற்சி நடப்பதாக புகார் கிளம்பியது.
பல தரப்பிலும் எதிர்ப்பும் எழுந்தது. இதனால், நிலம் கையகப்படுத்தும் பணியை மேற்கொள்ள முடியவில்லை. ஆட்சி மாற்றத்துக்குப் பின், இரண்டு புறமும் ஒரே அளவில் நிலம் எடுத்து, ரோட்டை விரிவாக்கம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை பலரும் முன் வைத்தனர்.
இதற்கேற்ப விரிவாக்கம் செய்யப்படும் ரோட்டின் அகலம், 22 மீட்டரிலிருந்து 18.6 மீட்டராக குறைக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை இடத்தை முழுமையாக எடுத்து, தனியார் நிலப்பரப்பைக் குறைத்து, இரு புறமும் ஒரே அளவில் நிலமெடுத்து, முழுமையாக கட்டடங்கள் இடிபடாத வகையில் நில ஆர்ஜித பிரேரணை திருத்தப்பட்டது. மொத்தம், 18 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் திட்டம், 6.1 ஏக்கர் பரப்பாகக் குறைக்கப்பட்டது.
நம்பிக்கை
மொத்தம் 97 சர்வே எண்ணுள்ள நிலங்களை கையகப்படுத்த வேண்டியுள்ளது. கடந்த ஆகஸ்ட்டில் பிரேரணை இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும், 2022 டிசம்பருக்குள் நிலம் கையகப்படுத்தும் பணி முடியுமென்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். ஆனால், இப்போது வரையிலும், நிலம் கையகப்படுத்துவதற்கு முதல் அறிவிக்கையான 15(2) நோட்டீசே இன்னும் விநியோகிக்கப்படவில்லை. வழக்கம்போல, மற்ற பணிகளை போலவே இதிலும் நிலம் கையகப்படுத்தும் பணி, ஆமை வேகத்தில் நடக்கிறது.
நிலம் கையகப்படுத்துவதற்கு இழப்பீடு வழங்க, 9.8 கோடி ரூபாய், ஏற்கனவே அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் பணத்தை வைத்து கொண்டு, நிலத்தை கையகப்படுத்தாமல், வருவாய்த்துறை அதிகாரிகள் தாமதப்படுத்தி வருகின்றனர்.
கடந்த அக்டோபரில் சொன்னதைப் போலவே, இப்போதும் ஒரு வாரத்தில் 15(2) நோட்டீஸ் விநியோகிக்கப்படும்; மிகக்குறைவான நிலப்பரப்பு என்பதால், இரண்டு மாதங்களில் நிலம் கையகப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'நிலம் கையகப்படுத்தும் பணியை முடித்துக் கொடுத்து விட்டால், இந்த நிதியாண்டின் இறுதிக்குள் திட்ட மதிப்பீட்டை அனுப்பி, ரோடு அமைக்க நிதி பெற்று விடுவோம். நிலம் கிடைத்து விட்டால், அடுத்த மாதத்திலேயே பணியை துவக்கி விடுவோம்' என்றனர். எப்போதுதான் பணி துவங்குமென்பது, மருதமலை முருகனின் பெயரைக் கொண்ட அமைச்சர் வேலுவுக்கே வெளிச்சம்!