கோவை:கல்வியாண்டு இடையில் ஓய்வு பெறுவோரை பணிநீட்டிப்பு செய்யாததால், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை வழி நடத்துவதில், சிக்கல் நீடிப்பதாக புகார் எழுந்துள்ளது.
பள்ளிக் கல்வித்துறையில் மற்ற பதவிகளில் இருப்போர், பணி ஓய்வு பெறும் போது, நீட்டிப்பு வழங்கப்படுவதில்லை. ஆனால், பொதுத்தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகள் கையாளும் பட்டதாரி, முதுகலை ஆசிரியர்களுக்கு மட்டும், பணிநீட்டிப்பு வழங்குவது வழக்கம்.
இவர்கள், கல்வியாண்டு இடையில் ஓய்வு பெற்றால், கற்பித்தல் பணிகள் பாதிக்கப்படும். புதிய ஆசிரியர்களை கொண்டு மீதமுள்ள பாடங்கள் நடத்தி முடித்தால் மாணவர்களின் கற்றல் நிலை பின்தங்க வாய்ப்புள்ளது.
கொரோனா தொற்று சமயத்தில், பொதுத்தேர்வு நடத்தாததால், இடையில் ஓய்வு பெற அனுமதிக்கப்பட்டது. அதே நடைமுறையை தற்போதும் பின்பற்றுவதால், பொதுத்தேர்வு மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தணிக்கையாளர் அருளானந்தம் கூறுகையில், ''கோவை மாவட்டத்தில் மட்டும், 20க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள், பொதுத்தேர்வுக்கு முன்பே, பணி ஓய்வு பெறுகின்றனர். கல்வியாண்டு இடையில் ஓய்வு பெற்றால், அப்பாட சந்தேகங்களை தெளிவுப்படுத்தவோ, மீதமுள்ள பாடங்களை கையாளவோ மாற்று ஆசிரியர்கள் நியமிப்பதில்லை. இதனால், பிற ஆசிரியர்களுக்கான பணிப்பளு அதிகரிக்கிறது. பட்டதாரி, முதுகலை ஆசிரியர்களுக்கு, பழைய நடைமுறைப்படி, கல்வியாண்டு இறுதி வரை, பணிநீட்டிப்பு வழங்க வேண்டும்,'' என்றார்.