கோவை:ரூ.16 கோடி செலவழித்து, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் மேம்படுத்தப்பட்ட, கோவை செல்வ சிந்தாமணி குளம் பராமரிப்பின்றி, புதர்மண்டிக் கிடக்கிறது. சிறுவர்கள் விளையாட இரும்பு கம்பங்கள் இருந்தாலும், ஊஞ்சல் இல்லை.
கோவை நகரின் மையப்பகுதியில், 1.69 சதுர கி.மீ., பரப்புக்கு செல்வ சிந்தாமணி குளம் அமைந்திருக்கிறது. 37 ஏக்கருக்கு, அதிகபட்சமாக, 7.60 அடி உயரத்துக்கு நீர் நிரப்புவதற்கு வசதி இருந்தது. முத்தண்ணன் குளத்தில் இருந்து உபரி நீர் இக்குளத்துக்கு வருகிறது. இக்குளத்தில் இருந்து உபரி நீர் வழிந்தோடிச் செல்ல ஒரு களிங்கு, மூன்று மதகுகள் இருந்தன.
களிங்கு பகுதியில் வெளியேறும் தண்ணீர், பேரூர் - சிவாலயா ஜங்சன் வழியாக திரும்பி, உக்கடம் பெரிய குளத்துக்கு செல்லும் வகையில் வழித்தடம் இருந்தது; இவ்வழித்தடம் மண்ணில் புதையுண்டு விட்டது. களிங்கு பகுதியில் தண்ணீர் வெளியேறினால், சிவாலயா தியேட்டருக்கு எதிரே உள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்து விடும். இதன் காரணமாக, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் வேலைகள் செய்தபோது, கான்கிரீட் தளம் அமைத்து, களிங்கு பகுதியே இல்லாமல் ஆக்கி விட்டனர். உபரி நீர் தானாக வழிந்தோடும் வகையில் மாற்றி, ஒரே ஒரு மதகு மட்டும் பொருத்தப்பட்டிருக்கிறது.
குளக்கரை பலப்படுத்தப்பட்டு நடைபாதை, ஆங்காங்கே அமர்வதற்கு இருக்கை வசதி, பார்வையாளர் மாடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தினமும், 10 லட்சம் லிட்டர் கழிவு நீரை சுத்திகரிக்க, சிறிய அளவில் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டு இருக்கிறது.
முத்தண்ணன் குளத்தில் இருந்தும், வழியோர குடியிருப்புகளில் இருந்தும் வெளியேற்றப்படும் கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு, இக்குளத்தில் தேக்கப்படுகிறது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்த போது, அ.தி.மு.க., ஆட்சியில், அவசர அவசரமாக திறந்து வைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டது. தினமும் காலை, மாலை நேரங்களில் செல்வபுரம் பகுதியை சேர்ந்த மக்கள், 'வாக்கிங்' செல்கின்றனர்.
பராமரிப்பு செய்யாததால், குளத்தை சுற்றிலும் புதர்மண்டி இருக்கிறது. குடிநீர் வசதியில்லை. கழிப்பறை வசதி செய்திருந்தாலும் பயன்பாட்டில் இல்லை; கேண்டீன் நடத்த கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
'டெண்டர்' கோர யாரும் முன்வராததால், மூடிக்கிடக்கின்றன. மின் விளக்குகள் எரிவதில்லை. சிறுவர்கள் விளையாடுவதற்கான குளத்தின் ஒரு பகுதியில் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது; ஆனால், ஊஞ்சல் வைக்காததால் ஏமாற்றம் அடைகின்றனர். பராமரிப்பு இல்லாத காரணத்தால், ரூ.16 கோடி செலவழித்து உருவாக்கப்பட்ட கட்டமைப்பு சிதிலமடைந்து வருகிறது.
மாநகராட்சி கமிஷனர் பிரதாப்பிடம் கேட்டபோது, ''சில நாட்களுக்கு முன், செல்வசிந்தாமணி குளத்தில் ஒரு மணி நேரம் 'வாக்கிங்' சென்றேன். ஒப்பந்ததாரர் பராமரிக்காமல் விட்டிருக்கிறார். புதர்மண்டி இருக்கும் இடங்களை சுத்தம் செய்யச் சொல்லியிருக்கிறேன். அங்குள்ள பொருட்களை சிறுவர்கள் திருடிச் செல்வதாக கூறுகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டியுள்ளது. கேண்டீன் இயக்க மீண்டும் டெண்டர் கோரப்படும்,'' என்றார்.