கோவை:புதுடில்லியில் நடக்கும் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க, கே.பி.ஆர்., கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லுாரி மாணவி பிரித்திவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கல்லுாரி முதல்வர் கீதா கூறுகையில், ''புதுடில்லியில் வரும் 26ம் தேதி குடியரசு தினவிழா அணிவகுப்பு நடக்கிறது. ராஜபாதை அணிவகுப்பில், மாணவி பிரித்திவி பங்கேற்கிறார். தமிழகம், புதுச்சேரி, அந்தமான் மற்றும் நிக்கோபார் ஆகிய நான்கு மண்டலங்களை உள்ளடக்கிய என்.சி.சி., இயக்குநரகம் சார்பில், இந்த அணிவகுப்புக்கான மாணவ, மாணவியர் தேர்வு நடந்தது. இதில், சீனியர்விங் பிரிவில், கே.பி.ஆர்., கல்லுாரி மாணவி, பிரித்திவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்,'' என்றார்.
கோவை 4 தமிழ்நாடு பட்டாலியன் கமாண்டிங் ஆபீசர் லெப்டினென்ட் பாரத், கே.பி.ஆர்., குழுமங்களின் தலைவர் ராமசாமி, தலைமை நிர்வாக அதிகாரி பாலுசாமி, என்.சி.சி., கேர் டேக்கர் ஸ்ரீதர் உள்ளிட்ட பேராசிரியர்கள் பிரித்திவிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.