'நிம்மதியா ஒரு டீ கூட குடிக்க முடியல...' 'ஒரு இடத்துல பத்து நிமிஷம் சேந்தாப்பல உட்கார முடியுதா...' என்ற புலம்பல்களை, நம் இல்லத்தில் அடிக்கடி கேட்டு அதை அப்படியே கடந்து விடுகிறோம். இதுபோன்ற புலம்பல்கள், பலருடைய மனதில் இருக்கிறது. அது மறுப்பதற்கில்லை. வேலைக்கு சென்று விடுவோர்... மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டு, பாரத்தை இறக்கி வைக்கின்றனர். ஆனால், நம் இல்லத்தரசிகளிடையே எழும் மன அழுத்தம் குறித்த குமுறல்களை புரிந்து கொள்ள மறுக்கிறோம். இல்லை... மறக்கிறோம்.
இரவு வெகு நேரத்துக்கு பின் துாங்கி, சூரியன் உதிப்பதற்கு முன்னால் எழுந்திருந்து, கடிகாரத்துக்கு நிகராக ஓடிக் கொண்டிருப்பவர்கள், நம் இல்லத்தரசிகள். வீட்டு வேலையையும் முடித்து பணிக்கு செல்லும் பெண்களின் மன வலியை புரிந்து கொண்டவர்கள், நிச்சயம் பாராட்ட பட வேண்டியவர்கள் தான். எல்லோர் குடும்பத்திலும் 'இளைப்பாறல்' இருந்து விட்டால், எந்தவித பிரச்னையும் வாசலை விட்டு தாண்டாது.
மத்திய அரசின் புள்ளிவிபரங்களின் படி, நாட்டின் தற்கொலை எண்ணிக்கையில், 7ல் ஒரு பங்கு இல்லத்தரசிகளாக உள்ளனர் என்பது சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் இதில், இரண்டாவது இடத்தில் உள்ளது என்பது தான் வேதனை.
குடும்ப ரீதியான சிக்கல்கள், நிதி பிரச்னை, குழந்தை கவனிப்பில் குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பின்மை, உணர்வுகள் பகிர்வின்மை என, மன அழுத்தங்களுக்கு ஆளாகும் பெண்கள், இதுபோன்ற விபரீத முடிவை எடுக்கின்றனர்.
இதுகுறித்து, உளவியல் நிபுணர் தினேஷ் கூறியதாவது:
பெண்களுக்கு என்று தனி கனவுகள், ஆசை என்பது உண்டு. கடந்தாண்டுகளில் பெண்களை திருமணத்துக்கு என்றே தயார்படுத்தும் சமூகமாக இருந்தது. தற்போது, படிக்க வேண்டும், சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவரிடமும் உள்ளது. இருப்பினும், திருமணத்துக்கு பின் வீடுகளுக்குள் பல பெண்கள் இல்லத்தரசிகளாக முடங்கி விடுகின்றனர். அவர்களின் ஆசைக்கும், நடைமுறை வாழ்வுக்கும் இடையே ஏற்படும் மன அழுத்தம், தேவையில்லாத எண்ணங்களுக்கு தள்ளிவிடுகிறது. குடும்ப பிரச்னைகள், நிதி சிக்கல், குடும்பத்தாரின் அன்பும், அரவணைப்பும் இல்லாமை, பாலியல் தேவை சார்ந்த ஏமாற்றங்கள், குழந்தைகள் பராமரிப்பு என, பல மன அழுத்தங்களுக்கு ஆளாகின்றனர்.
குழந்தை பராமரிப்பு என்பது பெற்ற தாய்க்கு மட்டும் பொறுப்பு என்பது தவறு. குழந்தையின் தந்தை, தாத்தா, பாட்டி என அனைவரும் பங்கெடுத்து, அவர்களுக்கு என தனிப்பட்ட நேரம் அவசியம் கொடுக்க வேண்டும். அவர்களின் குறைபாடுகள், சந்தோஷங்களை பகிர்ந்துகொள்ள முக்கியத்துவம் அளிக்கவேண்டும்.
பாலியல் சார்ந்த தேவை, குறைபாடுகளை மனம் விட்டு கணவன், மனைவி பேசிக்கொள்ள வேண்டியது அவசியம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
பேச்சு மட்டுமே, அனைத்துக்குமான தீர்வு. பேசினால், பல பாரங்கள் இறக்கி வைக்கப்படும். நம்பிக்கை ஏற்றி வைக்கப்படும் என்பது மட்டும் உறுதி.
நீங்கள் மன அழுத்தத்தில்இருந்தால்இறந்த காலத்தில்இருக்கிறீர்கள்.நீங்கள் கவலையிலிருந்தால்எதிர்காலத்தில் இருக்கிறீர்கள்.நீங்கள் மன அமைதியிலிருந்தால்நிகழ்காலத்தில் வாழ்கிறீர்கள்.
தொடாதே...பாதை தவறி கெடாதே...!