தங்கவயல்,--''தங்கவயலில் வீடுதோறும் கழிப்பறை கட்டுவதற்கு, அரசு வழங்கிய பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.
''இதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சிலிகாசிஸ் நோய்க்கு தங்கவயல் சுரங்க மருத்துவமனை அமைக்கப்படும் '' என தங்கவயல் தொகுதி ம.ஜ.த., வேட்பாளர் ரமேஷ் பாபு உறுதி அளித்தார்.
ம.ஜ.த., பொதுக் கூட்டம் முன்னாள் நகராட்சி உறுப்பினர் தாவீது தலைமையில் மாரிகுப்பம் தெலுங்கு லைன் பகுதியில் நேற்று முன் தினம் நடந்தது.
தங்கவயல் தொகுதி ம.ஜ.த., வேட்பாளர் ரமேஷ் பாபு பேசியதாவது:
தங்கச் சுரங்கத் தொழிலாளர்களுக்கு ஏற்படும் சிலிகாசிஸ் என்ற ஒரு வித காச நோயை குணப்படுத்த மருத்துவ வசதி இல்லை. இவ்விஷயத்தில் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்களாக இருந்தவர்கள் கவனம் செலுத்தவில்லை.
கர்நாடகாவில் மீண்டும் முதல்வராக குமாரசாமி பதவிக்கு வந்தால், தங்கச் சுரங்க பகுதியில் மருத்துவமனை அமைக்கப்படும்.
தங்கவயலில் வீடுதோறும் கழிப்பறை கட்டுவதற்கு, அரசு வழங்கிய பணத்தை கொள்ளையடித்துள்ளனர். இதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதுகுறித்து, நகராட்சி முன்னாள் தலைவர் தயானந்தா பேசியதாவது:
தங்கவயலில் தெலுங்கு மொழிபேசும் துப்புரவுப் பணியாளர் குடும்பத்தினர் வசிக்கும் 14 பகுதிகள் உள்ளன. தேர்தல் நேரத்தில் இவர்களின் ஓட்டுக்காக மட்டுமே அரசியல் தலைவர்கள் வந்து சென்றனரே தவிர, அடிப்படை வசதிகள், வேலை வாய்ப்புகளுக்காக எந்த உத்தரவாதமும் கிடைத்தபாடில்லை.
நகராட்சி தலைவராக நான் இருந்த போது துப்புரவு பணியாளர் பிள்ளைகளின் கல்வி வசதிக்காக 2,000 ரூபாய் உதவித் தொகை வழங்கினேன். ஆண்டுதோறும் அமலில் உள்ளது. அதுவும் நகராட்சி உறுப்பினர்களின் சொந்த பந்தங்களுக்கு மட்டுமே வழங்குகின்றனர்.
உழைக்கும் ஏழைகளை, ஓட்டுப் போடும் இயந்திரங்களாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
நகர ம.ஜ.த., தலைவர் பிரகாசம், ஆபிரகாம், நடராஜ், அமல்தாஸ் ஆகியோர் பேசினர்.