ஜம்மு:காங்கிரஸ் எம்.பி., ராகுல் மேற்கொள்ளும் பாரத ஒற்றுமை யாத்திரை, ஜம்முவுக்குள் நாளை நுழையவுள்ள நிலையில், நேற்று இங்கு அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்தன; ஒன்பது பேர் படுகாயம் அடைந்தனர். ஆனாலும், 'திட்டமிட்டபடி ஜம்முவில் யாத்திரை தொடரும்' என, காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரத ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் காங்கிரஸ் எம்.பி., ராகுல், நாடு தழுவிய நடைபயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த செப்., 7ல் கன்னியாகுமரியில் துவங்கிய இந்த யாத்திரை, நாளை ஜம்மு - காஷ்மீரின் ஜம்முவுக்குள் நுழையவுள்ளது.
பலத்த பாதுகாப்பு
தற்போது இந்த யாத்திரை குழுவினர் ஜம்மு - காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் முகாமிட்டுள்ளனர். இந்த யாத்திரை, இன்று இங்கிருந்து புறப்பட்டு, நாளை காலை ஜம்மு நகரை வந்தடையும். இதையொட்டி இங்கு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இந்நிலையில், நேற்று காலை 11:00 மணிக்கு ஜம்முவின் புறநகரில் உள்ள நார்வால் என்ற இடத்தில் பழுது பார்ப்பதற்காக நிறுத்தப்பட்டிருந்த பழைய கார் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில், அந்த பகுதியில் நின்ற ஐந்து அப்பாவி பொதுமக்கள் படுகாயம் அடைந்தனர்.
இந்த குண்டு வெடிப்பு நடந்து, 15 நிமிடங்களுக்குப் பின், அதற்கு சற்று தொலைவில் குப்பை கிடங்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில், மற்றொரு குண்டு பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில், நான்கு பேர் காயம் அடைந்தனர்.
அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்ததால், அந்த பகுதி மக்கள் பீதியடைந்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த பாதுகாப்பு படையினர், அந்த பகுதியை சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கூடுதல் படையினர் வரவழைக்கப்பட்டு, ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டது.
தீவிர சோதனை
இது குறித்து, ஜம்மு ஏ.டி.ஜி.பி., முகேஷ் சிங் கூறியதாவது:
காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களது நிலைமை சீராக உள்ளது.
குண்டு வெடிப்பு நடந்த ஒட்டுமொத்த பகுதியும், 'சீல்' வைக்கப்பட்டுள்ளது. இந்த சதிச் செயலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை தேடி வருகிறோம்.
வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயல் இழப்பு பிரிவினர் வரவழைக்கப்பட்டு, இங்கு வேறு ஏதாவது குண்டுகள் வைக்கப்பட்டுள்ளனவா என தீவிர சோதனை நடத்தப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
கடும் கண்டனம்
இந்த குண்டு வெடிப்புக்கு ஜம்மு - காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இதற்கிடையே, 'ஜம்முவில் திட்டமிட்டபடி யாத்திரை தொடரும்' என, காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.