பெங்களூரு,-சுற்றுச்சூழல் பாதுகாக்கும் வகையில் பெங்களூரு நகரில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் திட்டம் நேற்று துவக்கப்பட்டது. பொது மக்கள் அதிக அளவில் மரக்கன்றுகள் நடுவதற்கு முன் வர வேண்டும் என மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார்கிரிநாத் அழைப்பு விடுத்தார்.
பெங்களூரு மிக வேகமாக வளர்ந்து வரும் நகரமாகும். ஏராளமான மக்கள் வேலைவாய்ப்பிற்காக நகரில் குடியேறியுள்ளனர். சுற்றுச்சூழல் சீர்கேடும் ஏற்பட்டுள்ளது.
இவற்றை கட்டுப்படுத்தி, சுற்றுச்சூழல் பாதுகாக்கும் வகையில், நகர் முழுதும் ஒரு கோடி மரக்கன்றுகள் நடுவதற்கு பெங்களூரு மாநகராட்சி திட்டமிட்டது.
இத்திட்டம் துவக்கமாக, மாநகராட்சி தலைமை அலுவலக வளாகத்தில் தலைமை கமிஷனர் துஷார்கிரிநாத் நேற்று மரக்கன்று நட்டு, தண்ணீர் ஊற்றினார்.
பின், அவர் கூறியதாவது:
நாம் அனைவரும் நகர் முழுதும் அதிக அளவில் மரக்கன்றுகளை நட்டு, அவைகளை வளர்க்க வேண்டும். ஏரிகள், பூங்காக்கள் உட்பட காலி இடங்களிலும் மூன்று ஆண்டுகளில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடப்படும்.
கொரோனா பாதிப்பால், நகரில் அதிக அளவில் மரக்கன்றுகள் நட முடியவில்லை. ஒவ்வொரு ஆண்டும் மரக்கன்றுகளின் எண்ணிக்கையை அதிகரித்து நகரில் அதிக அளவில் வளர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு நகரில் குடியிருப்போர் நல சங்கங்கள், தன்னார்வலர்கள், மாணவர்கள் கை கோர்க்க வேண்டும்.
நகரில் இருக்கும் மரங்களில் துண்டு பிரசுரங்களை ஒட்டி, ஆணி அடித்து, ஆசிட் தடவி மரங்களை அழிக்கின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் கண்டறியப்பட்டால், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நகரில் பசுமையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் காற்று மாசு குறைவதுடன், பொதுமக்களுக்கு நல்ல சுவாச காற்றும் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.