ஒருவர், 25 ரூபாய் கட்டணம் செலுத்தினால் போதும்; ஒரு மணி நேரம் ஏ.சி., அறையில் ஓய்வெடுக்கலாம், நம்ம திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் தான் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பயணிகளுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்தித்தரும் விதமாக பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை தெற்கு ரயில்வே ஏற்படுத்தி வருகிறது. திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் இரண்டு பிளாட்பார்ம் உள்ளது. முதல் பிளாட்பார்ம் வழியாக கோவை, கேரளா, மங்களூரு மார்க்கமாக செல்வோரை விட, இரண்டாவது பிளாட்பார்ம் வழியாக ஈரோடு, சென்னை, பெங்களூரு வழியாக பயணிப்போரே அதிகம்.
பயண துாரம் இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை, நீண்ட துாரமாக இருப்பதால், பதட்டத்தை தவிர்க்க, முன்கூட்டியே ரயில்வே ஸ்டேஷன் வந்து பலர் காத்திருக்கின்றனர்.
ஏ.சி., படுக்கை, ஏ.சி., இருக்கை வசதி முன்பதிவு பெட்டியில் பயணிக்க டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள்; பிளாட்பார்மில் நெரிசல் மிகுந்த இடங்களில் காத்திருக்க நேர்ந்தது. இவர்களின் சிரமத்தை போக்கும் விதமாக, அனைத்து தரப்பு பயணிகளும் பயன்படுத்த இரண்டாவது பிளாட்பார்மில், 24 மணி நேரமும் பயன்படுத்தும் வகையில், குளிர்சாதன வசதியுடன் ஓய்வறை அமைக்கப்பட்டுள்ளது.
அறையை பயன்படுத்த பயணி ஒருவருக்கு, 25 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சொகுசு வசதியுடன் கூடிய, இருக்கை கொண்ட இந்த அறை பார்ப்பதற்கு 'ைஹடெக்' டாக காட்சியளிக்கிறது. எல்.இ.டி., ஸ்கிரீனில் டிவி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ரயில்கள் வந்து, செல்லும், புறப்படும் நேரம் அவ்வப்போது ஸ்பீக்கரில் அறிவிக்கப்படுகிறது.
இனி, நம்ம ஊர் ரயில்வே ஸ்டேஷனிலும், 25 ரூபாய் கொடுத்தால் போதும், ஏ.சி., அறையில் ஒரு மணி நேரம் ஓய்வெடுக்கலாம்!