'அந்த காலத்துல...நாங்க இப்படியெல்லாம் கஷ்டப்பட்டோம்; ஆனா, இந்த காலத்துல எல்லா சவுகரியமும் வந்துடுச்சு... இப்படியாக, அந்த காலத்தில் அனுபவித்த சிரமங்களை, இன்றைய தலைமுறையினருக்கு உணரச் செய்யும் அந்த காலத்து மனிதர்களை, இன்றளவும் பார்க்க முடியும்.
தொழில்நுட்பம் துவங்கி, போக்குவரத்து வரையிலான அனைத்திலும், ஆகச்சிறந்த முன்னேற்றத்தை அடைந்து கொண்டிருக்கிறோம். மொபைல் போன் சேவையில், அதிவேக செயல்பாட்டை வழங்கும் '5ஜி' அதாவது, 5வது தலைமுறைக்கான தொழில்நுட்பத்தை எட்டிப்பிடித்து விட்டோம். உலகின் எங்கோ ஒரு மூளையில் நடக்கும் நிகழ்வுகளை கூட, விரல் நுனிக்கு கொண்டு வரும் தொழில்நுட்பம் வந்து விட்டது.
இதற்கெல்லாம் ஆணிவேராக இருந்தது, தபால் பரிமாற்றம் தான். 'காகித வடிவில் கடித போக்குவரத்து' என்ற நிலையில் இருந்த தபால் அலுவலகங்கள் கூட, இன்று டிஜிட்டல் மயமாகிவிட்டன.
மணியார்டர், அரசு வழங்கும் பென்ஷன் என, அனைத்தும் தபால்காரர் வழியாகத் தான் வீடு வந்து சேரும் என்ற காலகட்டத்தில், 'போஸ்ட் மேன் எப்போ வருவார்...' என, வழி மேல் விழி வைத்து காத்திருந்த காலமும் இருந்திருக்கிறது; சில ஒதுக்குப்புற கிராமங்களில், இன்றளவும் இது, இருக்கத்தான் செய்கிறது.
சைக்கிளை மிதித்தபடி ஊருக்குள் நுழையும் 'போஸ்ட்மேன்', ஊர் மக்களின் உறவாகவே மாறியிருந்த காலங்களும் உண்டு. வெயில், மழை என பாராமல், காடு, மலை என, அஞ்சாமல் ஒத்தை கடிதத்தை கூட எடுத்துச் சென்று உரியவர்களிடம் சேர்க்கும் அர்ப்பணிப்பு பணியை, தபால்காரர்கள் செய்து வந்தனர்; இன்றும் கூட சில இடங்களில் அத்தகைய பணியை செய்தும் வருகின்றனர்.
தபால் மூட்டைகளை சுமக்க மூன்று சக்கர சைக்கிள்கள் பயன்படுத்தப்பட்ட காலங்களும் உண்டு. அவிநாசி தபால் நிலைய வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மூன்று சக்கர சைக்கிள், தபால் துறை, தபால் ஊழியர்கள் ஆற்றிய கடினமான பணியை பறைசாற்றி கொண்டிருக்கிறது.