பெங்களூரு,-''கர்நாடகாவில் பள்ளிச் சிறுவர்களுக்கு ஆணுறை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கவில்லை. ஆனால் அவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்,'' என கர்நாடகா மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது.
பெங்களூரில் உள்ள சில பள்ளிகளில், கர்நாடக மாநில கல்வித் துறை அதிகாரிகள், சோதனை நடத்தினர்.
அப்போது 8, 9, 10 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் பைகளில், மொபைல் போன்களுடன் ஆணுறைகள், கருத்தடை மாத்திரைகள், சிகரெட்டுகள், லைட்டர்கள் போன்றவை இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இந்தப் பொருட்களை கைப்பற்றி, மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே சில பள்ளி மாணவர்கள் மதுபானம் அருந்துவது, கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளை பயன்படுத்துவது போன்றவற்றால் சீரழிந்து வருவதாக தகவல்கள் வெளி வருகின்றன.
இந்நிலையில் பெங்களூரில் பள்ளி மாணவர்கள் ஆணுறை, கருத்தடை மாத்திரைகளை வைத்திருந்தது சமூக ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியது.
இச்சூழலில், கர்நாடகா மருந்துக் கட்டுப்பாட்டு துறை, 18 வயதுக்கு கீழ் உள்ளோருக்கு ஆணுறை, கருத்தடை மாத்திரைகள், வலி நிவாரணி போன்றவற்றை விற்க தடை விதித்து சுற்றறிக்கை அனுப்பியதாக தகவல் வெளியானது.
இதன் எதிரொலியாக, கருத்தடை சாதனங்களுக்குத் தடை விதிப்பது சரியல்ல என்ற விமர்சனங்களும் எழுந்தன. இவ்வாறு தடை விதிப்பதால் சிறுவர்கள், தவறான பாதையை நோக்கிப் போகக் கூடும் என சமூகஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர்.
கருத்தடை சாதனங்களுக்கு தடை விதித்தால் பாலியல் சார்ந்த நோய் பரவலுக்கும், எதிர் பாராத கருத்தரிப்புக்கும் வழி வகுக்கலாம். ஆணுறைகளுக்கு தடை விதித்தால் திருமணத்திற்கு முன்பே கருத்தரிக்கும் பெண்கள் அவ்வப்போது கருக்கலைப்பு செய்து, அவர்கள் உடல்நிலை கடுமையாக பாதிக்கக் கூடும் என்றும் சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசு விளக்கம் அளித்துள்ளது.
கருத்தடை சாதனங்களுக்குத் தடை விதிப்பது தொடர்பாக சுற்றறிக்கை எதுவும் அளிக்கவில்லை. ஆனால் கருத்தடை சாதனங்களை கேட்கும் சிறார்களுக்கு மருந்து விற்பனையாளர்கள் அறிவுரை வழங்க வேண்டும். எனவே சிறார்கள், ஆணுறை வாங்க எந்த தடையும் இல்லை என அரசு கூறியுள்ளது.
மதுபானம், சிகரெட்டுகள் 18 வயதுக்குக் கீழ் இருப்போருக்கு விற்பனை செய்ய வேண்டாம் என்ற விதிகள் சில இடங்களில் பின்பற்றப்படுகின்றன. ஆபாச படங்களை 18 வயதுக்குக் கீழ் இருப்போர் பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.