தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பிறந்தநாள், திருமணநாள் என, விழாக்காலங்கள், விசேஷ நாட்களில் அன்பையும், வாழ்த்தையும் பரிமாறிக் கொள்வதில் தான், அந்த நாட்களின் முக்கியத்துவம் உணரப்படுகிறது; அதன் மகத்துவம் வெளிப்படுகிறது.
இதுபோன்ற விசேஷ நாட்களில், வாழ்த்து அட்டைகளை ஒருவருக்கொருவர் அனுப்பிக் கொள்வதும், வாழ்த்து அட்டையில் பதிந்திருக்கும் வாழ்த்து வாசகங்களை படித்து இன்புறுவதும், 'கடந்த கால' நினைவுகளாக மாறிவிட்டன.
காரணம், இ--மெயில், இன்டர்நெட், மொபைல் போன், வாட்ஸ் ஆப், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், டெலிகிராம்... இவ்வாறு எத்தனை எத்தனையோ...
இயந்திரமயமாகிவிட்ட வாழ்க்கை சூழலில் வாயாற வாழ்த்து சொல்லக் கூட நேரமில்லாமல், 'ஹேப்பி பர்த்டே' என்பதை கூட, 'எச்பிடி' என, சுருக்கி பதிவிடும், அவசர உலகில் இன்றைய இளைய தலைமுறை வாழ்ந்து வருகிறது.
இதனால், பண்டிகை, விசேஷ நாட்களில், தபால்காரரின் பையை நிரப்பியிருக்கும் வாழ்த்து அட்டைகள் இன்று, இல்லாமலே போய்விட்டன. இருப்பினும், அவிநாசி அருகே சேவூர் - சாலையப்பாளையம் ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவ, மாணவியர், ஆசிரியை சத்யபிரியாவின் ஊக்குவிப்பால், பொங்கல் வாழ்த்து அட்டைகளை தாங்களே வரைந்து, தங்கள் நலம் விரும்பிகளின் வீடுகளுக்கு தபால் மூலம் அனுப்பி வைத்தனர்.
வெறும் படம் மட்டுமல்லாமல், சில வேலைப்பாடுகளுடன் கூடிய, வண்ணமய வாழ்த்து அட்டைகளை வடிவமைத்து இருந்தனர். அதனை பார்த்த மக்களுக்கு, இன்ப அதிர்ச்சி. பழமையை மறக்காமல், நினைவூட்டிய மாணவர்கள், பயிற்சி வழங்கிய ஆசிரியை ஆகியோரை வாழ்த்து கிடைக்கப் பெற்றவர்கள் மனதார வாழ்த்தினர்.