பண்டிகை என்றாலே கொண்டாட்டம் தான். அதிலும் தமிழர்களின் பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் வெளிப்படுத்தும்பொங்கல் விழா மேலும் சிறப்பு வாய்ந்த விழாவாக தமிழ் மக்கள் வசிக்கும் அனைத்து பகுதியிலும் பெரும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுவது வழக்கம்.
பொங்கல் பண்டிகை என்பது போகிப் பண்டிகையில் துவங்கி, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என நான்கு நாள் கொண்டாட்டம். அவ்வகையில் நடப்பாண்டும் கடந்த வாரம் பொங்கல் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
இந்தாண்டு பொங்கல் பண்டிகை பல்வேறு தரப்பினரும், பல லட்சம் மக்களும் வசிக்கும் திருப்பூர் நகரில் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. பாரம்பரிய முறைப்படி கிராமப் பகுதிகளில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுடன் நடைபெறுவது வழக்கம். திருப்பூர் போன்ற வளர்ந்து வரும், பல்வேறு கலாசாரங்களை பின்பற்றும் பல தரப்பு மக்களும் இது போன்ற நிகழ்வுகளை முழுமையாக காண முடியாத நிலை இருந்தது.
அந்த குறையைப் போக்கும் விதமாக, 'திருப்பூர் பொங்கல் திருவிழா 2023', கடந்த வாரம் திருப்பூரை கலகலக்க வைத்தது என்பதை மறுக்கவோ, மறக்கவோ முடியாது. தமிழர் திருநாளான பொங்கல் விழாவை மக்கள் ஒற்றுமை விழாவாக நடத்தும் வகையில் திட்டமிடப்பட்டது.
திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம், இவ்விழாவை நடத்திவரும் ஜீவநதி நொய்யல் சங்கம் மற்றும் நொய்யல் பண்பாட்டு அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து விழாவை நடத்தியது. மாநகராட்சி சார்பில், நொய்யல் நதி மற்றும் கரைகள் துார்வாரியும், இரு கரைகளை ஒட்டி அமைந்துள்ள ரோடுகள் சீரமைப்பு செய்தும் விழாவுக்கான ஏற்பாடுகள் துவங்கின.
மூன்று நாள் கொண்டாடட்டம், ஆட்டம், பாட்டம் என களைகட்டியது. திருப்பூர் மண்ணின் கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக வாய்ப்பளிக்க முடிவானது. அதே சமயம் தமிழ் கலாசாரம், பண்பாடு, நாட்டுப்புறக் கலைகளை சிறப்பிக்கும் வகையில், கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன.
'கலக்கிய' நிகழ்ச்சிகள்
மங்கள இசை, நாட்டுப் புறப்பாடல்கள், காவடியாட்டம், ஒயிலாட்டம், வள்ளி கும்மி, கரகாட்டம், கட்டைக்கால் ஆட்டம், பள்ளி மாணவர்கள் கலை நிகழ்ச்சி, தேவராட்டம், கம்பம் சுற்றியாடுதல் ஆகியன பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன. கொங்கு மண்டலத்தின் பாரம்பரியமிக்க இது போன்ற நிகழ்வுகள் மட்டுமின்றி, திருவண்ணாமலை பெரிய மேளம், கர்நாடக மலையக மக்களின் டொல்லு குனிதா, மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட 'செல்பி பாயின்ட்' ஆகியனவும் திருப்பூர் மக்களை பெரிதும் மகிழ்வித்தது.
பொங்கல் திருவிழாவின் சிறப்பாக, ஹிந்து, இஸ்லாமியர், கிறிஸ்துவர், திருநங்கையர் என, எவ்வித பேதமின்றி மூவாயிரம் பெண்கள் பங்கேற்று நொய்யல் நதிக்கரையில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி மிகவும் விமரிசையாக நடைபெற்றது. மூன்றாம் நாள் அதிகாலை பல்வேறு தரப்பினரும் ஒன்று கூடி இந்நிகழ்ச்சியை திருப்பூர் நகரின் ஒற்றுமையையும், பொங்கல் பண்டிகையின் சிறப்பையும் வெளிப்படுத்தும் விதமாக பொங்கல் வைத்தனர். இதில் பங்கேற்ற பெண்களுக்கு தமிழர் கலாசாரத்தின்படி பொங்கல் சீர் வழங்கப்பட்டது.
நொய்யலை காப்போம்...
நதிக்கரை நாகரிகம் வளர்ந்த நம் நாட்டில், நொய்யல் ஆற்றின் தோற்றம் மற்றும் பயன்பாடு குறித்தும் அதன் சிறப்புகளை அனைத்து தரப்பினரும் அறிந்து கொள்ளும் வகையில், நொய்யல் நதி குறித்த நுால் வெளியிடப்பட்டது.
மனித வாழ்வுக்கு மிக முக்கியமான ஆதாரமாக உள்ளது நீர். திருப்பூர் மக்களுக்கு பெரும் நீர் ஆதாரமாக விளங்கும் 'நொய்யலை காப்போம்' என்ற உறுதி மொழியேற்று பொங்கல் விழாவில் பங்கேற்றவர்கள் கலைந்தனர்.
தமிழ் கூறும் நல்லுலகம் எல்லாம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், திருப்பூர் பொங்கல் திருவிழா நிகழ்வுகள் திக்கெட்டும் திருப்பூர் நகரின் ஒற்றுமையை ஒலிக்கச் செய்யும் வகையில் நடந்தது, ஒவ்வொரு திருப்பூர் வாசியின் மனதிலும் நீங்காத இடம் பிடித்தது என்பதை மறுக்க முடியாது.
மங்கள இசை, நாட்டுப் புறப்பாடல்கள், காவடியாட்டம், ஒயிலாட்டம், வள்ளி கும்மி, கரகாட்டம், கட்டைக்கால் ஆட்டம், பள்ளி மாணவர்கள் கலை நிகழ்ச்சி, தேவராட்டம், கம்பம் சுற்றியாடுதல் ஆகியன திருப்பூர் மக்களை பெரிதும் கவர்ந்தன.