கர்நாடக சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் கர்நாடகாவில் பஞ்சாரா ஜாதியினருக்கு பிரதமர் நரேந்திர மோடி பட்டா வழங்கிய விவகாரம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. உள்ளூர் எம்.எல்.ஏ. , வழங்க வேண்டிய பட்டாவை, பிரதமர் மோடி வழங்குவது என்பதே ஜாதி ஓட்டுகளை குறி வைத்து தான் என சாடியிருக்கிறார் ம.ஜ.த., தலைவர் குமாரசாமி.
கர்நாடக சட்டசபை தேர்தலில் கர்நாடகாவில் ஆட்சியை தக்க வைக்க பா.ஜ.,வும், ஆட்சியை மீண்டும் கைப்பற்ற காங்கிரசும், கிங் மேக்கராவதற்கு ம.ஜ.த.வும் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றன. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை விரைவுபடுத்திவிட்டன. ம.ஜ.த., உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களையும் அறிவித்து தேர்தல் பணியை துவங்கி விட்டனர்.
புதிய வருவாய் கிராமங்கள்
இந்நிலையில் கர்நாடகாவில் கலபுரகி, யாத்கிர், ராய்ச்சூர், பீதர், விஜயபுரா ஆகிய ஐந்து மாவட்டங்களில் 1,475 பதிவு செய்யப்படாத குடியிருப்புகள் புதிய வருவாய் கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
கலபுரகி மாவட்டத்தின் சேடம் தாலுகாவின் மால்கேட் கிராமத்தில் புதிய வருவாய் கிராமங்களைச் சேர்ந்த தகுதியுடையப் பயனாளிகளுக்கு பிரதமர் மோடி பட்டாக்களை வழங்கினார்.
பட்டியலினம் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த விளிம்புநிலை மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டதன் மூலம், அவர்களுடைய நிலத்திற்கு அரசின் முறையான அங்கீகாரம் கிடைத்துள்ளது. குடிநீர், மின்சாரம், சாலை போன்ற அரசின் சேவைகளைப் பெறுவதற்கு அவர்கள் தகுதியுடையவர்கள் ஆவர்.
௬ மாநில விரைவுச்சாலை
இந்நிகழ்ச்சியின் போது, என்.ஹெச்.,- 150 சி பிரிவின் 71 கிலோ மீட்டர் துாரத்திற்கு சாலை அமைக்கவும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். இந்த 6 வழி பசுமைச் சாலைத்திட்டம் சூரத்- - சென்னை விரைவுச் சாலையின் ஒரு பகுதியாகும். இது 2,100 கோடி ரூபாய்க்கும் மேலான செலவில் அமைக்கப்பட்டு வருகிறது. குஜராத், மஹாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, தமிழகம் என 6 மாநிலங்களில் இந்த விரைவுச் சாலை இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் தற்போதைய வழித்தடம் 1,600 கிலோ மீட்டரிலிருந்து, 1,270 கிலோ மீட்டராக குறையும்.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
2023ம் ஆண்டு இப்போது தான் துவங்கியிருக்கிறது. இந்த ஜனவரி மாதத்தில் தான் இந்தியாவின் அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது. சுதந்திர இந்தியாவின் குடிமக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டன.
இந்த மாதத்தில், கர்நாடக மாநில அரசு, சமூக நீதி தொடர்பான மிக முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 3,000-க்கும் மேற்பட்ட மக்கள் வாழும் பகுதிகளை வருவாய் கிராமங்களாக நிலை உயர்த்திய கர்நாடக அரசின் முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
பாரம்பரிய உடையில் ஆசீர்வாதம்
நமது நாட்டின் மேம்பாட்டிற்காக பஞ்சாரா இன மக்கள் சிறப்பான பங்களிப்பை செய்துள்ளனர். 1994 ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது, நான் கலந்து கொண்ட பேரணியில் லட்சக்கணக்கான பஞ்சாரா இனமக்கள் கலந்து கொண்டனர். பஞ்சாரா இனத்தைச் சேர்ந்த தாய்மார்களும், சகோதரிகளும் பாரம்பரிய உடையில் வந்து ஆசீர்வாதம் வழங்கினர்.
பஞ்சாரா இனத்தைச் சேர்ந்த தாய்மார்களே, கவலை கொள்ளாதீர்கள். உங்கள் மகன்களில் ஒருவர் டில்லியில் உங்களின் தேவைகளை நிறைவு செய்து வருகிறார். பஞ்சாரா சமுதாயத்தினருக்கான வேலைவாய்ப்பை கர்நாடக அரசு ஏற்படுத்தி வருகிறது.
வன உற்பத்தி பொருட்கள், விறகு, தேன், பழங்கள் அல்லது மற்ற தயாரிப்புகள் வருவாய் ஆதாரங்களாக விளங்குகிறது. முந்தைய அரசு வன உற்பத்தியின் சில பொருட்களுக்கு மட்டுமே குறைந்தபட்ச ஆதரவு விலையை அளித்தது. தற்போது 90-க்கும் மேற்பட்ட வன உற்பத்திப் பொருட்களுக்கு அது வழங்கப்படுகிறது.
சுதந்திரத்திற்கு பின், பல ஆண்டுகளாக வளர்ச்சியின் பயன்களை பெரும்பாலான மக்கள் அடைய முடியவில்லை. அரசின் உதவி கிடைக்கவில்லை. தலித் சமுதாயத்தினர், ஒடுக்கப்பட்டோர், பின்தங்கியோர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் மற்றும் பெண்கள் முதன்முறையாக பலன் அடைந்து வருகின்றனர்.
இவ்வாறு பஞ்சாரா மற்றும் பட்டியலின மக்களை குறி வைத்து பேசினார்.
ம.ஜ.த., குற்றச்சாட்டு
பஞ்சாரா ஜாதியினருக்கு இந்த பட்டாக்களை வழங்க உள்ளூர் எம்.எல்.ஏ., போதுமே. பிரதமர் மோடி ஏன் வருகை தர வேண்டும். எல்லாமே தேர்தலுக்கான நாடகம் என்கிறது என ம.ஜ.த., பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளது.
கர்நாடகாவில் ஒக்கலிகா, எஸ்.சி., - -எஸ்.டி., ஓட்டுகள் காங்கிரசுக்கு ஓட்டு வங்கியாக இருக்கின்றன; லிங்காயத்கள் பா.ஜ.,வின் பெரும் நம்பிக்கைக்குரிய ஓட்டு வங்கியாக இருக்கின்றனர்.
கர்நாடகா மக்கள் தொகையில் எஸ்.சி., - எஸ்.டி.,யினர் மொத்தம் 24 சதவீதம். கர்நாடகா தலித்துகளில் பஞ்சாரா ஜாதி, மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே தலித்துகளுக்கான இடஒதுக்கீடு அளவை, கர்நாடகா அரசு அதிகரித்திருக்கிறது. தற்போது பட்டாக்களை வழங்கி இருக்கிறது. இப்படி அடுத்தடுத்து, தலித்துகளை இலக்கு வைப்பதால் எளிதாக ஓட்டுகளை அள்ள முடியும் என்பது பா.ஜ., கணக்கு என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்
- நமது நிருபர் -.