திருப்பூர்:திருப்பூர் ஒன்றியத்தை சேர்ந்த, 52 குழுக்களை சேர்ந்த பெண்கள், 'வாழ்ந்து காட்டுவோம்' திட்டத்தின் மூலமாக, தொழில் துவங்க விண்ணப்பித்துள்ளனர்.
தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சித்துறை சார்பில், 'வாழ்ந்துகாட்டுவோம்' திட்டம், திருப்பூர் மாவட்டத்தில், ஐந்து ஒன்றியங்களில் செயல்படுத்தப்படுகிறது. மகளிர் குழுவினருக்கான இத்திட்டம், திருப்பூர், உடுமலை, அவிநாசி, குண்டடம், பொங்கலுார் ஒன்றிய அளவில் செயல்படுத்தப்படுகிறது.
மகளிர் குழு உறுப்பினர்களை, தொழில் முனைவோராக உயர்த்தும் திட்டத்தில், 30 சதவீதம் (அதிகபட்சமாக, 40 லட்சம் ரூபாய்) மானியத்துடன் தொழிற்கடன் வழங்கப்படும். உற்பத்தி, சேவை, வியாபாரம், பண்ணை சார்ந்த தொழில்கள், பண்ணை சாரா தொழில்கள் துவங்க, வங்கிகடன் உதவி வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில், 21 முதல், 45 வயது வரையுள்ள, இரண்டு ஆண்டுக்கு மேல் மகளிர் குழுவில் உள்ள, புதிய தொழில் துவங்கும் அல்லது தொழில் விரிவாக்கம் செய்யும் பெண்கள் பயன் பெறலாம். மொத்த மதிப்பீட்டில், 10 சதவீதத்தை பங்களிப்பாக செலுத்தி, 90 சதவீதத்தை வங்கிக்கடனாக பெறலாம்.
மதிப்பு கூட்டப்பட்ட தொழில் துவங்க...
இத்திட்டத்தில், தேங்காய் சார்ந்த மதிப்பு கூட்டப்பட்ட பொருள் தயாரிப்பு, அரிசி சார்ந்த பொருட்கள், சிறுதானியம் சார்ந்த மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், தக்காளி, சின்ன வெங்காயம், வாழை, பப்பாளி, எலுமிச்சை, காளான், பால், மாவு, மசாலா பொருள் தயாரிப்பு தொழில்களை துவக்கலாம்.
காளான் மற்றும் பனை சார்ந்த, ஊறுகாய், அப்பளம், சிப்ஸ், கரும்பு சாறு, வெல்லம் கற்கண்டு, நாட்டு சர்க்கரை, முளை கட்டிய பயறு, பழக்கூழ், ஜாம் வகைகள், சூப் வகைகள், கேக் உலர் பழங்கள், உணவு சார்ந்த தொழில்கள், வேளாண் சார்ந்த மதிப்பு கூட்டப்பட்ட தொழில்கள் துவக்கலாம்.
இத்திட்டத்தின் மூலம், மகளிர் குழுவினர் பயன்பெறும் வகையில், ஒன்றியம் வாரியாக சிறப்பு முகாம் நடந்தது. நேற்று, திருப்பூர் ஒன்றியத்தில் சிறப்பு கடன் முகாம் நடந்தது. 24ம் தேதி அவிநாசி ஒன்றியத்திலும், 25ம் தேதி உடுமலையிலும் முகாம் நடக்க உள்ளது.
திருப்பூர் ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடந்த முகாமில், ஊராட்சிகளை சேர்ந்த மகளிர் குழுவினர் பங்கேற்று, தங்களது தொழில் திட்ட அறிக்கையுடன், கடன் கேட்டு விண்ணப்பித்தனர். மொத்தம், 120 பேர் பங்கேற்று விசாரித்தனர்; 52 பேர் தொழில் துவங்க கடனுதவி கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.
இத்திட்டத்தில், 21 முதல், 45 வயது
வரையுள்ள, இரண்டு ஆண்டுக்கு மேல்
மகளிர் குழுவில் உள்ள, புதிய தொழில்
துவங்கும் அல்லது தொழில் விரிவாக்கம்
செய்யும் பெண்கள் பயன் பெறலாம்.