திருப்பூர், அவிநாசி ரோடு, காந்தி நகர், இ.பி., காலனியை சேர்ந்தவர் இரேந்திரகுமார், 34; லாஜிஸ்டிக் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் திருப்பூர் ரைடர்ஸ் கிளப் வாயிலாக, பல இடங்களுக்கு சைக்களில் செல்வது வழக்கம்.
இந்நிலையில், கால நிலை மாற்றம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைக்கிளில், 30 ஆயிரம் கி.மீ., சென்று விழிப்புணர்வு செய்ய உள்ளார். அவ்வகையில், 19ம் தேதி திருப்பூர் பப்பீஸ் ஓட்டலில் விழிப்புணர்வு பயணத்தை இரேந்திரகுமார் துவக்கினார்.
புனேவை சேர்ந்த டாக்டர் அனில் லம்போ கொடியசைத்து துவக்கி வைத்தார். திருப்பூரில் இருந்து கொச்சின் சென்றடைந்தார்.
''யங் இந்தியா - சி.ஐ.ஐ., - திருப்பூர் ரைடர்ஸ் கிளப் ஆகிய அமைப்பு சார்பில், 30 ஆயிரம் கிலோ மீட்டரை இலக்காக வைத்து, கால நிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை துவங்கியுள்ளேன். பல்வேறு கட்டங்களாக இப்பயணத்தை மேற்கொண்டு, இவ்வாண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளேன்.
சுற்றுச் சூழலை பாதுகாக்க வேண்டும், கால நிலை மாற்றம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும். அதே நேரத்தில், உடலை பேணி காக்க வேண்டும் உள்ளிட்ட அனைத்தையும் உள்ளடக்கியது இப்பயணம்,'' என தனது பயணத்தின் நோக்கம் குறித்து, பேசினார், இரேந்திரகுமார்.