வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வென்றால், முதல்வராகும் ஆசையில் சித்தராமையா உள்ளார். வரும் தேர்தலில், கோலார் மாவட்டம் கோலார் தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
இத்தொகுதியில் அவர் வெற்றி பெறுவது, அவ்வளவு எளிதல்ல என கூறப்படும் நிலையில், கடந்த தேர்தலை போல் இரண்டு தொகுதிகளில் போட்டியிடலாம் என கூறப்படுகிறது. இதற்காக மூன்று தொகுதிகளை தேர்ந்தெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது எம்.எல்.ஏ.,வாக உள்ள பாதாமி, போட்டியிடுவதாக அறிவித்துள்ள கோலார், மகன் எம்.எல்.ஏ.,வாக உள்ள வருணா ஆகிய தொகுதிகள் மீது கண் வைத்துள்ளார்.
கடந்த தேர்தலில் பாகல்கோட் மாவட்டம் பாதாமியில் போட்டியிட்டு சித்தராமையா வெற்றி பெற்ற நிலையில் அவர் தற்போது தொகுதி மாறி கோலாரில் களமிறங்குவதாக அறிவித்துள்ளார்.
இதற்கு கட்சி மேலிடம் அனுமதி அளிக்கும் என கூப்படுவதால் ஏறக்குறைய சித்தராமையா அங்கு போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.
கடந்த தேர்தலில் மைசூரு மாவட்டம் வருணா தொகுதியை, தனது மகன் யதீந்திராவுக்கு விட்டு கொடுத்த சித்தராமையா மைசூரு மாவட்டம் சாமுண்டீஸ்வரி, பாகல்கோட் மாவட்டம் பாதாமி தொகுதிகளில் களமிறங்கினார். இதில் சாமுண்டீஸ்வரியில் தோல்வியடைந்தார்; பாதாமியில் வெற்றி பெற்றார்.
பா.ஜ.,வுக்கு சித்தராமையா தான் பதிலடி கொடுக்கிறார். இதனால் அவரை வீழ்த்த அக்கட்சி நினைக்கும். அதே போல கூட்டணி ஆட்சியை கவிழ்த்தது சித்தராமையா தான் என்ற கோபத்தில், முன்னாள் முதல்வர் குமாரசாமி உள்ளார். சித்தராமையா எங்கு போட்டியிட்டாலும் அவரை தோற்கடித்தே தீருவேன் என சபதம் எடுத்துள்ளார். இவ்வாறு பல முனைகளில் அவருக்கு எதிர்ப்பு உள்ளது.
கோலார் மாவட்ட காங்கிரஸ் தலைவர்களிடம் ஒற்றுமை என்பது இல்லை. இது சித்தராமையாவுக்கு பாதகமாக அமையலாம். காங்கிரஸ் சார்பில் முதல்வர் போட்டியில் சித்தராமையாவின் பெயர் உள்ளது. பாதாமியில் போட்டியிடவும் எதிர்ப்பு உள்ளது. இதனால், அவர் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது அவசியம் என ஆதரவாளர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதற்காக மூன்று தொகுதிகளை தேர்வு செய்துள்ளார். இந்த மூன்றில் இரண்டில் போட்டியிடுவார் என கூறப்படுகிறது. மனு தாக்கல் நேரத்தில் இது குறித்து உறுதியான நிலை தெரிய வரும்.
ஏற்கனவே 'சீட்' கேட்டு தொகுதிக்கு மூன்றுக்கும் மேற்பட்டோர் காத்திருப்பதால், சித்தராமையாவுக்கு இரண்டு தொகுதிகள் கிடைக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
- நமது நிருபர் -