திருத்தணியில், 6 ஏக்கர் பரப்பளவில், மா, தென்னை, வாழை மரங்கள் சூழ்ந்த, இயற்கை எழில் கொஞ்சும் தோட்டத்தில் வசித்து வரும், 'தோட்டம்' முனியம்மா: 'ஆர்கானிக்' உணவுகள் எடுத்துக் கொள்ள, இன்று பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். என்னைப் பொறுத்தவரை ஆர்கானிக் என்பது, உணவில் மட்டுமல்ல... உணர்விலும் இருக்க வேண்டும்.
திருத்தணியில் ஏராளமான திருமண மண்டபங்கள் உள்ளன.அங்கெல்லாம் விசேஷ நிகழ்ச்சிகளை நடத்தும் பலர், தென்னை ஓலை, வாழை மரம், மாவிலை உட்பட பலவற்றை, எங்கள் தோட்டத்திலிருந்து வெட்டி எடுத்துச் செல்வர். மங்கள நிகழ்ச்சிகளுக்குத் தானே கேட்கின்றனர்என்று, அதற்கு அனுமதித்தேன்.
பல திருமணங்களில் பங்கேற்ற போது, சில விஷயங்கள் என்னை உறுத்தின... அதாவது, மங்கள நிகழ்ச்சிகளில், பச்சை மரம், செடி, கொடிகளை கட்டுவோர், அங்கு, 'பிளாஸ்டிக்' தண்ணீர் பாட்டில்கள், பிளாஸ்டிக், 'கப்'கள், தண்ணீர் பாக்கெட்டுகள், 'தெர்மாகோல்' தட்டுகள் என, இயற்கையை சீரழிக்கும் விஷயங்களுக்கு முக்கியத்துவம் தருகின்றனரே என வேதனைப்பட்டேன்.
அதனால், இனி யாருக்கும் மாவிலையோ, தென்னை ஓலையோ வெட்டிக் கொடுக்கக்கூடாது என்று முடிவெடுத்தேன்.
அவை வேண்டும் என வந்து கேட்பவர்களிடம், 'மணமக்கள் வாழ்க்கை, பசுமையாக இருக்கணும்னு தானே, இதெல்லாம் வெட்டிக் கொண்டு போறீங்க. வேணும்ன்னா எங்கள் தோட்டத்திற்கே வந்து, திருமணம் செய்து வையுங்கள்' என்றேன்.
பின், மகனிடம் சொல்லி, தோட்டத்திலேயே இயற்கை விழாக்கூடம் ஒன்று அமைத்தோம்; அதுவும், சிமென்ட் சுவர்களால் கட்டப்பட்டதல்ல... இரும்பு, 'பைப்'புகள் கொண்டு, மழையோ, வெயிலோ பாதிக்காதபடி எளிமையாக அமைத்து உள்ளோம்.
உணவுக் கூடமும் திறந்த வெளியில் தான்; தேவைப்பட்டால் துணிப்பந்தல் அமைத்துக் கொள்ளலாம்.
தற்போது, எங்கள் தோட்டத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்துவோர், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்பதே முதல் நிபந்தனை.
பாக்குமட்டை தட்டு, வாழையிலை அல்லது மந்தாரை இலை, எவர்சில்வர் டம்ளரில் குடிநீர்; இப்படித்தான் பயன்படுத்த வேண்டும்.
இங்குள்ள விருந்தினர்களுக்கான அறைகள், மண்ணால் சுவர் எழுப்பி, மஞ்சம் புல்லால் வேய்ந்த கூரைகளை கொண்டவையே.
குடிநீரை கிணற்றில் இருந்து, நேரடியாக மோட்டார் வாயிலாக எடுத்துக் கொள்ளலாம்.
உட்காருவதற்கு மரம் மற்றும் சிமென்ட்டாலான, 'பெஞ்ச்'கள், ஓய்வெடுக்க கயிற்றுக் கட்டில்கள் என, எங்களால் முடிந்தவரை இயற்கை சூழலை, தோட்டத்தில் பாதுகாத்து வருகிறோம்.
இங்கு வருபவர்களுக்கு ஒரு கிராமத்துக்குள் நுழைந்து ஆசுவாசப்படுத்திக் கொண்ட திருப்தி, நிச்சயம் கிடைக்கும்.
திருக்குறளால் பல பட்டங்கள் பெற்றுள்ளேன்!
தந்தையின் வழியில்,
குறள் சேவை செய்து வரும் திருக்குறளம்மா என்ற தமிழ்ச்செல்வி: அப்பா பெயர்
சாமிநாதன். திருவண்ணாமலையில், இந்தப் பெயரைச் சொன்னால் யாருக்கும்
தெரியாது. திருக்குறளார் கேப்டன் த.சாமிநாதன் என்றால் தான் தெரியும்.
படித்து
விட்டு என்ன வேலைக்கு போவது என, அப்பா தவித்த போது, ஆசிரியர் ஒருவர்,
'முயற்சி திருவினையாக்கும்...' என்ற குறளையும், அதன் விளக்க உரையையும்
சொல்ல, அது, அவருக்கு உந்துசக்தியாக மாறியது.
அதன்பின்,
திருக்குறளையே வேதநுாலாக எடுத்துக் கொண்டார். ராணுவ பணிக்கு தேர்வாகி,
அங்கு பணியாற்ற சென்ற போதும், அவர் கையில் கொண்டு போனது, திருக்குறள்
புத்தகம் மட்டுமே.
அதன் அருமை, பெருமைகளை, மற்ற மாநிலங்களைச்
சேர்ந்த சக பணியாளர்களுக்கும், ராணுவ உயரதிகாரிகளுக்கும், அவரவர் மொழியில்
சொல்லி மகிழ்வித்துள்ளார்.
இறக்கும் தருவாயில், 'மகளே உனக்கென்று
பெரிய சொத்து எதையும் விட்டுச் செல்லவில்லை; ஆனால், திருக்குறளை விட
உயர்ந்த சொத்து எதுவுமில்லை' என்று கூறி, திருக்குறள் புத்தகத்தை கொடுத்து,
உயிரை விட்டார். அப்பா வழியிலேயே, நானும் இப்போது குறள் சேவை செய்து
வருகிறேன்.
நான் சந்திக்கும் நபர்களிடம், ஒரு திருக்குறள் சொல்லச்
சொல்வேன். சரியாக சொல்பவர்களுக்கு, 'குறளமுது' என்ற 'சாக்லேட்' தருவேன்.
நான்கைந்து குறள்களை, 'மடமட'வென சொல்லி விட்டால், திருக்குறள் புத்தகம்
ஒன்றை பரிசாக தருவேன்.
தினமும் வீட்டின் முன்பக்க சுவரில், ஒரு
திருக்குறளுடன், அதற்கான தெளிவுரையையும் எழுதி வைப்பேன். வீட்டில் உள்ள
ஒலிபெருக்கியின் வாயிலாக, ஒவ்வொரு நாளும் காலையில், ஒரு திருக்குறளும்,
அதற்கான பொருளையும் சொல்வேன்.
திருவண்ணாமலையில் பிரதான சாலையில்
அமைக்கப்பட்டிருக்கும், திருவள்ளுவர் சிலைக்கு பிரதி ஞாயிறன்று மாலை
அணிவித்து, ஒரு அதிகாரத்தில் உள்ள, 10 குறள்களுடன் தெளிவுரையையும்
சொல்வேன்; இதை கேட்பதற்காகவே, பலரும் ஆர்வமாக அப்பகுதியில் கூடுவர்.
என்
கணவர் கமலக்கண்ணனுக்கு, இன்று எல்லா குறள்களும் அத்துப்படி. திருக்குறள்
பிரசாரம் செய்வதற்கு, அவர் எனக்கு பக்கபலமாக உள்ளார். எங்களின் மூன்று
மகள்களும், என்னை வெகுவாக ஊக்கப்படுத்துகின்றனர்.
பள்ளிகள்,
கல்லுாரிகள், அரசு விழாக்களுக்கு என்னை அழைத்து கவுரவப்படுத்தி உள்ளனர்.
'குறளரசி, திருக்குறளம்மா' என, பல பட்டங்களையும் வழங்கியுள்ளனர். தமிழக
அரசு, 'தமிழ்ச்செம்மல்' விருதுடன், பணமுடிப்பும் வழங்கி கவுரவித்துள்ளது.