டி.ஈஸ்வரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சட்டசபையில் சமீபத்தில் உரை நிகழ்த்திய கவர்னர் ரவி, தி.மு.க.,வினர் புகழ்பாடும் வாசகங்களை தவிர்த்து, உரையை வாசித்து முடித்தார். இதற்காகவும், 'தமிழ்நாடு' என்பதை தமிழகம் என்று சொன்னால், நன்றாக இருக்கும் என்று, கவர்னர் கூறியதற்காகவும், அவரை, தி.மு.க.,வினர் தினமும் விமர்சித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு, தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், அரசு சார்பில் மாநிலம் முழுதும் முக்கிய இடங்களில், விளம்பர, 'போர்டு'கள் வைக்கப்பட்டன. அந்த விளம்பர போர்டுகளில், மு.க.ஸ்டாலின் படத்துடன், 'தமிழகம் தலைநிமிர்கிறது' என்ற வாசகமும் இடம் பெற்றது.
இதை எல்லாம் பார்த்து, அதைப்பற்றி தெரிந்து தான், 'தமிழ்நாடு என்பதை விட, 'தமிழகம்' என்று சொல்வதே சிறப்பாக இருக்கும்' என்றார் கவர்னர் ரவி.
ஆனால், முதல்வர் ஸ்டாலின் ஒரு விழாவில் பேசும் போது, 'தமிழ்நாடு என்று சொல்லக்கூடாது என, யாரோ ஒருவன் புலம்புகிறானே' என்று, கவர்னரை திட்டிஉள்ளார். யாரோ புலம்புகிறானே என்று, பொத்தாம் பொதுவாக பேசுவது, முதல்வருக்கு அழகல்ல.
'எமர்ஜென்சியை எதிர்த்து நின்றவன் நான்' என, தம்பட்டம் அடிக்கும் முதல்வர் ஸ்டாலின், துணிச்சல் இருந்தால், கவர்னரின் பெயரை சொல்லி திட்ட வேண்டியது தானே... அதில், என்ன தயக்கம்? அண்ணாதுரை துவக்கிய கட்சிக்கு, இன்று தலைவராக இருந்தால் மட்டும் போதாது முதல்வரே... அவர் சொன்ன, எதையும் தாங்கும் இதயத்தையும் பெற்று இருக்க வேண்டும்.
'தமிழகம்' என்று ஊரெங்கும் சொன்னதே, தி.மு.க., ஆட்சியாளர்கள் தான். தவறை இவர்கள் செய்து விட்டு, கவர்னர் மீது பழி சுமத்துவது நியாயமா?
தேசத்தின் துரதிர்ஷ்டம் இது!
முனைவர் மீனாட்சி பட்டாபிராமன்,
மதுரையில்இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சினிமாவுக்கு, அன்றும்
ரசிகர்கள் இருந்தனர்; இன்றும் உள்ளனர். வித்தியாசம் என்னவெனில், அன்றைய
இளைஞர்கள், சினிமாவை வெறும் பொழுதுபோக்காக எண்ணினர்; இன்றைய இளைஞர்களுக்கு
எல்லாமுமே சினிமா தான்!
எம்.கே.தியாகராஜ பாகவதர் துவங்கி,
எம்.ஜி.ஆர்., காலம் வரை, ரசிகர்கள் கூட்டம் நிலை தடுமாறி, நெறி தவறி,
மூன்றாந்தர மனிதர்களாக நடந்து கொண்டதில்லை. அவர்கள் ரசிகர்கள்;
இன்றிருப்பவர்கள் வெறியர்கள். அன்று வந்த படங்களும், நடித்த நாயகர்களும்,
நல்ல சமுதாய சீர்திருத்த கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்த்தனர்.
அதன்பின்
வந்தவர்கள், 'ஸ்டைல்' என்ற பெயரில், சிகரெட் குடித்து, மது குடிப்பது போல
நடித்து, மாணவர்கள் கவனத்தை திசை திருப்பி விட்டனர். இயக்குனர்களும் தங்கள்
பங்கிற்கு போட்டி போட்டு, ஆசிரியை - மாணவர் காதல், காதல் தோல்வி என்றால்
தற்கொலை, குடும்ப பாரத்தை தாங்க விபச்சாரம், பொருந்தாக் காதல் என்றெல்லாம்
கதை அமைத்து, இளைஞர்கள் மனதை பாழ்படுத்தி விட்டனர்.
இப்போதைய
இளைஞர்கள் பலருக்கு, தாங்கள் விரும்பும் நடிகர் தான் எல்லாம்; தாய், தந்தை
எல்லாம் அப்புறம் தான். தன் ஆதர்ஷ நடிகரின் படம் பண்டிகைக்கு வெளிவரா
விட்டால், நொந்து நுாடுல்ஸ் ஆகி, தீக்குளிக்கும் கூட்டமும் உள்ளது. அந்த
அளவுக்கு இன்றைய இளைஞர்களை மூளைச்சலவை செய்து வைத்திருக்கின்றனர், இந்த
மகானுபாவர்கள்.
குடிக்கக் கஞ்சி இல்லாத ஏழை வீட்டுப் பையனும்,
திருடியாவது தன் தலைவன் படத்தைப் பார்க்கிறான்; அத்துடன், ஆடி, பாடி,
கூத்தடிச்சு, 'கட் அவுட்'டுக்கு பால் அபிஷேகம் செய்து, சூடம் சாம்பிராணி
காண்பித்து, கடைசியில் உயிரையும் விடுகிறான். அப்படிதான், சமீபத்தில் லாரி
மீது ஏறி ஆடி கீழே விழுந்து, ஒரு நடிகரின் ரசிகன் இறந்துள்ளான்.
சரி...
இதெல்லாம் செய்தி. இப்படியே எல்லாரும் பேசிக் கொண்டிருந்தால், இதற்கு
விடிவு தான் என்ன... முடிவு தான் எங்கே... கடிவாளம் யார் போடுவது? அரசை
கேட்க முடியாது. ஏனென்றால், திரைப்பட வியாபாரிகளே அவர்கள் தான்.
முன்னர்
வியாபாரம் செய்ய வந்து, இங்கு ஆட்சியைப் பிடித்தனர், ஆங்கிலேயர்கள்;
இப்போது ஆட்சிக்கு வந்து வியாபாரம் நடக்கிறது. எவன் செத்தால் என்ன...
அவர்களுக்கு கஜானா நிரம்பினால் சரி! இப்படி உள்ள, 'குடி'யரசிடம் வேறு என்ன
எதிர்பார்க்க முடியும்?
மொத்தத்தில் எதுவும் சரியில்லை;
பெற்றவர்களுக்கு கண்டிக்க உரிமையில்லை; ஆசிரியருக்கு சுத்தமாக
மரியாதையில்லை. யார் சொல்லி இந்த திசைமாறிய இளைஞர் சமுதாயம்
கேட்கப்போகிறது? இன்றைய இளைஞர் சமுதாயம், இன்னுமொரு நுாற்றாண்டுக்கு கெட்டு
குட்டிச்சுவராகி விட்டது, தேசத்தின் துரதிர்ஷ்டம்.
பாகிஸ்தான் நம் உடன்பிறப்பு அல்லவா!
சி.கலாதம்பி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நல்லதுக்கு ஒண்ணு சேரலை என்றாலும், கெட்டதுக்கு சேரணும்' என, கிராமப்புறத்தில் சொலவடை உண்டு. அதாவது, ஒரு வீட்டில் நல்லது நடக்கும் போது, அதில் பங்கு பெறாவிட்டாலும், அந்த வீட்டில் துக்கம் நடக்கும் போது, கண்டிப்பாக பங்கேற்று, சோகத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே அதன் அர்த்தம்.
சுதந்திரத்திற்கு பின், நம்மிடம் இருந்து பிரிந்த நாடு பாகிஸ்தான். அகிம்சை, ஜனநாயக வழியில், நம் நாடு முன்னேற்றப் பாதையில் சென்ற போது, சர்வாதிகாரம், ஊழல், பயங்கரவாத ஆதரவு என, தடம் மாறிச் சென்றது பாகிஸ்தான். பாகிஸ்தான் ஆதரவுடன் பயங்கரவாதிகள், நம் நாட்டில் ஏற்படுத்திய சேதங்கள் அளவிட முடியாதவை; மேலும், அதன் காயங்கள் நமக்கு ஆறவே ஆறாது என்றாலும் கூட, பாகிஸ்தான் நம் உடன்பிறப்பு அல்லவா!
ஒரு தாயின் பிள்ளைகளில், ஒரு பிள்ளை தவறான வழியில் சென்றால் கண்டிக்க வேண்டும். அதே நேரம், அந்த பிள்ளை நோய்வாய்ப்பட்டால், அதைக் காப்பாற்ற வேண்டிய அன்பு, நம்மிடம் இருக்க வேண்டும்.
இன்று, பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, அந்நாட்டு மக்கள், பெரும் துயரத்தில் இருக்கின்றனர்.
அங்கே, கிலோ கோதுமை, 150 ரூபாய்க்கும், அரிசி, 165 ரூபாய்க்கும், டீ துாள், 1,100 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. பஞ்சம் தலைவிரித்தாடுவதால், உணவுக்காக ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும் அவலங்கள் அரங்கேறுகின்றன.
உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் பின்னால், பசிக்காக ஓடும் நம் உடன்பிறப்புகளை காணும் போது, கண்ணீர் வருகிறது; பசியால், மக்கள் இறக்க துவங்கியுள்ளனர் என்ற செய்தி, நம் நெஞ்சை பிழிகின்றது.
நம் நாட்டின் அரசியல் பாதையை வடிவமைத்த, அதை பின்தொடர்ந்த அரசியல்வாதிகளுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும். பாகிஸ்தான் என்றில்லை... உலகின் எந்த மூலையில் மக்கள் பசியால் வாடினாலும், உணவுடன் நீளும் முதல் கரம், நம் தேசத்தின் கரமாக இருக்க வேண்டும்.
பாகிஸ்தான் கேட்டு, நாம் உதவியதாக இருக்க வேண்டாம். அவர்களின் துயர் அறிந்து, இந்திய அரசு தானாக முன் வந்து, உணவுப் பொருட்களை அள்ளி வழங்க வேண்டும். பாகிஸ்தான் மக்களின் துயரை துடைப்போம்; நம் உடன்பிறப்புகளுக்கு உறுதுணையாக இருப்போம்.
இந்த அன்பும், ஆதரவும், பாகிஸ்தானின் தவறான அரசியல் கொள்கையை மாற்றக்கூடும். அந்நாட்டினர் திருந்தவும் வாய்ப்பாக அமையும்.
மென்மையான தண்டனைகள் கூடாது!
எஸ்.செபஸ்டின், சிவகாசி, விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கல்லுாரி மாணவர்கள் பஸ்கள் மீதும், ரயில்கள் மீதும் ஏறி அராஜகம் செய்வது, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதே அன்றி, குறைந்தபாடில்லை. அதற்கு காரணம், அராஜகத்தில் ஈடுபடும் மாணவர்கள் கைது செய்யப்பட்டாலும், அவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படுவதில்லை.
அதாவது, மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும், அவர்களின் பெற்றோரை கருத்தில் கொண்டும், கைதாகும் மாணவர்களுக்கு, 'ஒரு நாள் முழுதும் போக்குவரத்தை சரி செய்தல், அரசு மருத்துவமனைகளில் பணி செய்தல்' போன்ற சிறிய தண்டனைகளையே நீதிமன்றங்கள் வழங்குகின்றன.
அந்த தண்டனைகளை தவறு செய்யும் மாணவர்கள், வேடிக்கையாக எடுத்துக் கொள்கின்றனரே அன்றி, சீரியசாக எடுத்துக் கொள்வதில்லை; அதை ஜாலியான விஷயமாக நினைத்து, நண்பர்களுடன் சேர்ந்து கேலி, கிண்டல் செய்தும் மகிழ்கின்றனர்; தங்களின் தவறை திருத்த, நீதிமன்றம் விதித்த தண்டனையாக நினைப்பதில்லை.
எனவே, அராஜகம் மற்றும் அட்டூழியம் செய்யும் மாணவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை யானது, பிற மாணவர்கள் பயந்து திருந்தும் விதமாக இருக்க வேண்டும். பல ஆயிரம் மாணவர்களின் கல்வியும், வாழ்வும் சீராகிறது என்றால், ஒரு சில மாணவர்களின் கல்வி பாதிப்படைவது குறித்து கவலைப்படுவது, சரியாக இருக்காது.
அதேபோல, இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக சென்று, பிற உயிர்களுக்கு சேதத்தை விளைவிக்கும் இளைஞர்களின் வாகனங்களையும் பறிமுதல் செய்து, ஏலம் விட வேண்டும். மேலும், அப்படிப்பட்டவர்களின், 'டிரைவிங் லைசென்ஸ்சு'க்கு, வாழ்நாள் தடை விதிக்க வேண்டும். தண்டனைகள் கடுமையானால் தான், தடம் புரள்வோர் திருந்துவர். மென்மையான தண்டனைகளால் மாற்றங்கள் நிகழாது.
தமிழர்கள் காதுகளில் பூச்சூடுகின்றனர்!
என்.வைகை வளவன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'சமஸ்கிருதமானது, அந்தணர்களுக்கு மட்டுமே உரிய மொழி. அவர்கள் மட்டுமே பயன்படுத்தும் மொழி' என்ற தவறான கருத்தை, திராவிட செம்மல்கள் இதுநாள் வரை பரப்பி வந்துள்ளனர். தமிழ் மொழி போல, சமஸ்கிருதமும் காலம் கடந்து நிற்கும் தொன்மையான மொழி என்பதை, சுலபமாக மறந்து விட்டனர், இந்த அறிவுஜீவிகள்.
ராமாயணத்தை, சமஸ்கிருத மொழியில் எழுதிய, வால்மீகி முனிவர் அந்தணர் அல்ல. இரண்டாம் சந்திரகுப்தர் என்ற, போஜராஜன் அவையில் இருந்த, மகாகவி காளிதாசர், பிறப்பால் ஆடுகள் மேய்க்கும், இடையர் குலத்தைச் சேர்ந்தவர்.
ஆனாலும், காளியின் அருளால் காவியங்கள் படைக்கும் திறமை பெற்று, சமஸ்கிருத மொழியில் நிறைய காவியங்கள் படைத்து, கவிச் சக்கரவர்த்தியானார்.
மகாபாரதம் என்ற புகழ் பெற்ற இதிகாசத்தை, சமஸ்கிருத மொழியில் படைத்த வியாசர், மீனவப் பெண்ணுக்கு மகனாகப் பிறந்தவர். காயத்ரி மந்திரம் சொன்ன, விஸ்வாமித்திரர், வசிஷ்டர் என்ற, அந்தணர் வாயால், 'பிரம்ம ரிஷி' பட்டம் பெற்றவர். சத்திரிய குலத்தில் அவதரித்த இவரும் அந்தணர் அல்ல.
ராமாயணத்தை எழுதி, 'கவிச்சக்கரவர்த்தி' என்று போற்றப்பட்ட கம்பர், சமஸ்கிருத மொழியை நன்கு கற்றதால் தான், சமஸ்கிருதத்தில் வால்மீகி எழுதிய ராமாயணத்தை, தமிழில் மொழி பெயர்த்து, பெரிய சாதனை படைத்தார். தமிழை வளர்த்த அகத்தியரும், சமஸ்கிருத புலமை பெற்றிருந்ததால் தான், சூரியனை போற்றும், 'ஆதித்திய ஹிருதயம்' என்ற பாடலை பாடி, பெருமை அடைந்தார்.
இன்று, அந்தணர் குலத்தில் பிறக்காத மாணவர்கள் பலர், பள்ளிப் படிப்பில் இரண்டாவது மொழியாக சமஸ்கிருதம் கற்று, அதிக மதிப்பெண் பெறுகின்றனர். சாஸ்திரங்கள், வேதங்கள், உபநிடதங்கள் சமஸ்கிருதத்தில் தானே இருக்கின்றன.
நம் நாட்டின் தேசிய மொழியான, ஹிந்தி மொழியே சமஸ்கிருத மொழியிலிருந்து உருவானது தானே. இத்தனை சிறப்புக்கள் உள்ள சமஸ்கிருத மொழியை, 'தேவபாஷை, அந்தணர்களுக்கே உரிய மொழி' என்று, ஒரு தவறான பிம்பத்தை உருவாக்கி, அதில் குளிர் காய நினைக்கின்றனர், திராவிட செம்மல்கள்.
அத்துடன், சாஸ்திரங்கள், வேதங்கள், சம்பிரதாயங்கள் எல்லாம், மூடநம்பிக்கைகள் என்றும் சொல்லி, அப்பாவி தமிழர்களின் காதுகளில் பூச்சூடுகின்றனர். சமஸ்கிருதத்தை ஆதரிக்கும் அந்தணர்கள், தமிழ் மொழியை வெறுப்பது இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. இதுவே, அந்தணர்களுக்கும், திராவிட செம்மல்களுக்கும் உள்ள வித்தியாசம்!
தலையில் மிளகாய் அரைப்பது தொடரும்!
ந.தேவதாஸ், சென்னையில் இருந்து எழுதுகிறார்: 'தேர்தலுக்கு முன் கும்பிடு வோம்; வெற்றி பெற்றதும் கண் தெரியாது' என, உண்மையை ஒப்புக் கொண்ட, தமிழக கைத்தறி மற்றும் துணி நுால் துறை அமைச்சர் காந்தியை, உண்மையாகவே பாராட்ட வேண்டும்.
'நாங்கள், அரசியல்வாதிகள். தேர்தலுக்கு ஒரு மாதம் முன்பிருந்தே, பார்ப்பவர்களை எல்லாம் கும்பிடுவோம். குழந்தைகள் அழுகையில், 'சாக்லேட்' கொடுப்பது போல, மக்களுக்கு என்ன தேவையோ தேர்தல் நேரத்தில் மட்டுமே அதை செய்வோம். துாக்கத்தில் மனைவி கை பட்டாலும், அவர்களையும் கும்பிடுவோம்.
'ஆனால், வெற்றி பெற்ற வுடன், அரசியல்வாதிகளுக்கு கண்ணே தெரியாது' என்றும், அவர் கூறியிருக்கிறார். அவர் சொல்லத் தவறிய சிலவற்றை, இங்கு குறிப்பிட விரும்புகிறேன்...
அரசியல்வாதிகள் ஓட்டு கேட்டு வீடு தேடி வரும் போது, நாம் துணி துவைத்துக் கொண்டிருந்தால், அதை பிடுங்கி அவர்கள் துவைப்பர். கிணற்றில் தண்ணீர் இரைத்தால், அதை பிடுங்கி, அவர்கள் இரைத்துக் கொடுப்பர்.
வழியில் டீக்கடை தென்பட்டால், டீ மாஸ்டரிடம் குவளையை வாங்கி, அவர்களே டீ போட்டு, வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பர்; கூடவே பஜ்ஜி, போண்டாவும் போடுவர்.
நாம் வீட்டு வாசலை பெருக்கிக் கொண்டிருந்தால், உரிமையோடு துடைப்பத்தை வாங்கி, அவர்களும் பெருக்குவர். நாம் துடைப்பத்தை பிடுங்கி செல்லமாக, இரண்டு தட்டு தட்டினாலும், புன்சிரிப்போடு அதையும் ஏற்றுக் கொள்வர்; அந்த நேரத்தில் அவர்களுக்கு கோபமே வராது; கண்மண் தெரியாமல் பாசத்தை பொழிவர்.
இதை எல்லாம் செய்த பின், தேர்தலில் அவர்கள் வெற்றி பெற்று விட்டால், மறுபடியும் அவர்களை பார்க்க வேண்டும் என்றால், குதிரைக்கு கொம்பு முளைக்க வேண்டும்.
எனவே, மக்களாகிய நாம், நமக்கு யார் நல்லது செய்வர் என யோசித்து, ஓட்டு போட வேண்டும்; அப்போது தான் அரசியல்வாதிகளுக்கு பயமும், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணமும் வரும்.
இதைத்தான் நமக்கு சூசகமாக சொல்லியிருக்கிறார், அமைச்சர் காந்தி. அது புரியாமல், நாம் கண்மூடித்தனமாக ஓட்டுப் போட்டுக் கொண்டிருந்தால், அரசியல்வாதிகள் நம் தலையில் மிளகாய் அரைப்பது தொடரவே செய்யும்.
அமைச்சரின் பேச்சை கேட்கையில், 'மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே... இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்மகவலை...' என்று, எம்.ஜி.ஆர்., பாடிய பாடல் வரிகள் தான், நினைவுக்கு வருகிறது.